இந்நாட்டில் தொடர்ந்து மறுக்கப்பட்டு மறைக்கப்பட்டு வரும் மலேசிய இந்தியர்களின் அடிப்படை உரிமைக்கான கோரிக்கைகளை மத்திய அரசாங்கம் உடனடியாக அமல்படுத்தவேண்டும் எனக் கோரி நேற்று மாலை கிள்ளானில் அமைதி ஊர்வலம் ஒன்று இடம்பெற்றது. (படங்கள்)
சிலாங்கூர் மாநில நடவடிக்கை குழு ஏற்பாடு செய்திருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியோர் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் மலேசிய இந்தியர்களின் முன்னேற்றத்திற்கு வழிவகுக்கக்கூடிய 12 அம்ச கோரிக்கைகள் அடங்கிய பாதகைகளை ஏந்தியவாறு ஊர்வலமாக சென்றனர்.
மாலை 6 மணியளவில் ஆரம்பமான இவ் ஊர்வலம் கிள்ளான் செட்டி திடலிருந்து ஜலான் துங்கு கிளானா வழியாக சென்று மாலை 7 மணி அளவில் மீண்டும் செட்டி திடலை வந்தடைந்தது.
தமிழர் திருநாள் நிகழ்வின் ஒரு அங்கமாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த இந்த அமைதி ஊர்வலத்தில் சிலாங்கூர் ஆட்சிக் குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார், நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவராசா, மாணிக்கவாசகம், சுவராம் தலைவர் ஆறுமுகம், சிலாங்கூர் நடவடிக்கை குழு தலைவர் சேகரன், அரசு சார பொது அமைப்புகளின் தலைவர்கள், கிள்ளான் நகராண்மை கழக உறுப்பினர்கள் என பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர்.
முதலாம் வகுப்பு தொடங்கி பல்கலைக்கழகம் வரை இலவசக் கல்வி வேண்டும்; தமிழ்மொழி சார்ந்த இடைநிலைப்பள்ளிகள் அமைக்கப்பட வேண்டும்; அனைத்து தமிழ்ப்பள்ளிகளும் முழு உதவி பெறும் பள்ளிகளாக மாற்றப்படவேண்டும்; சிவப்பு அடையாள அட்டை ஒழிக்கப்படவேண்டும்; போன்ற முக்கிய கோரிக்கைகள் இந்த அமைதி ஊர்வலத்தின் போது இடம்பெற்றிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.