என்எப்சி பாணியிலான அம்பலத்துக்கு தயாராகுங்கள் என பிகேஆர் நஜிப்-பிடம் சொல்கிறது

960 மில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீது தூய்மையாக இருக்க வேண்டும் அல்லது என்எப்சி எனப்படும் தேசிய விலங்குக் கூட நிறுவன பாணியிலான அம்பலத்தை எதிர்கொள்ளத் தயாராக இருக்குமாறு பிகேஆர் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை எச்சரித்துள்ளது.

அந்தத் திட்டம் டெண்டரில் தோல்வி கண்ட நிறுவனம் ஒன்றுக்கு வழங்கப்பட்டது எனக் கூறப்படுவதாக பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் கூறினார். அந்த நடவடிக்கை நஜிப் நிர்வாகம் வழங்கியுள்ள ஊழல் எதிர்ப்பு வாக்குறுதியைக் கேலிக் கூத்தாக்கியுள்ளதாக அவர் சொன்னார்.

“பிகேஆர் இன்று தொடக்கம் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை அந்த ஊழல் பற்றிய தகவல்களை வெளியிடும். அது ஊழலையும் அதிகார அத்துமீறலையும் முறியடிப்பதற்கு நஜிப் கொண்டுள்ள கடப்பாட்டுக்குச் சோதனையாக அமையும்,” ராபிஸி விடுத்த அறிக்கை கூறியது.

சிலாங்கூர் அரசாங்கத்திலிருந்து தாம் விலகிக் கொண்டதை பிகேஆர் கட்சியில் ஏற்பட்டுள்ள பிளவு என சித்தரிக்கும் அம்னோ தில்லுமுல்லுக்கு தாம் கொடுக்கும் பதிலடியாக அது இருக்கும் என அவர் சொன்னார்.

விரைவில் எதிர்பார்க்கப்படும் பொதுத் தேர்தல் மீது கவனம் செலுத்துவதற்காகவே தாம் அந்தப் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டதாக ராபிஸி குறிப்பிட்டார்.

“நஜிப் தமது நிர்வாகத்தின் தோற்றத்திற்கு களங்கம் ஏற்படாமல் இருக்க அந்த ஊழலைக் கவனமாக கையாள வேண்டும் என நான் யோசனை சொல்கிறேன்,” என்றார் அவர்.

அம்னோ மகளிர் பிரிவின் தலைவியான ஷாரிஸாட் அப்துல் ஜலிலின் குடும்ப உறுப்பினர்களை எஜமானர்களாக கொண்ட என்எப்சி, அரசாங்கம் வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் கடனை தவறாகப் பயன்படுத்தியதாகக் கூறப்படும் விவகாரத்தை அம்பலப்படுத்துவதில் ராபிஸி முக்கியப் பங்காற்றினார்.

அந்த விவகாரம் வெளிச்சத்துக்கு வந்ததைத் தொடர்ந்து ஷாரிஸாட், மகளிர், குடும்ப, சமூக மேம்பாட்டு அமைச்சராக மறு நியமனம் பெறவில்லை. அவரது கணவர் முகமட் சாலே இஸ்மாயில் மீது அரசாங்கம் என்எப்சி-க்கு வழங்கிய 250 மில்லியன் ரிங்கிட் எளிய கடன் தொடர்பில் நம்பிக்கை மோசடிக் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

எல்ஆர்டி விரிவுத் திட்டம் மீதான திறந்த டெண்டரில் நஜிப் தலையிட்டார்

அந்த ஊழல் குறித்து விவரித்த ராபிஸி, “கிட்டத்தட்ட ஒரு பில்லியன் ரிங்கிட் மதிப்புள்ள அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் ஜார்ஜ் கெண்ட் கொன்சோர்ட்டியம் என்ற நிறுவனத்துக்குக் கிடைப்பதை உறுதி செய்வதற்காக  திறந்த டெண்டரில் நஜிப் தலையிட்டார்,” எனத் தெரிவித்தார்.

“திறந்த டெண்டர் முறையில் பெரிய திட்டங்களை வழங்குவதின் வழி வெளிப்படையான போக்கைப் பின்பற்றப் போவதாக பிரதமர் வாக்குறுதி அளித்திருந்த போதிலும் ஜார்ஜ் கெண்ட்-க்கு அந்தக் குத்தகை கிடைப்பதை உறுதி செய்ய நஜிப் நேரடியாகத் தலையிட்டார் என பிகேஆர் நம்பத்தகுந்த தகவல்கள் கிடைத்துள்ளன,” என்றார் ராபிஸி.

ஜுன் 22ம் தேதி பிஸினஸ் டைம்ஸ் நாளேட்டில் அந்தக் குத்தகையைப் பெறுவதில் ஜார்ஜ் கெண்ட் வெற்றி பெற்றுள்ளதாக அடுத்த சில தினங்களில் அறிவிக்கப்படும் என வெளியான செய்தி ஒன்றை பிகேஆர் வியூக இயக்குநர் மேற்கோள் காட்டினார்.

அந்தத் திட்டம் ஜார்ஜ் கெண்ட்-டுக்குக் கொடுக்கப்படும் என நஜிப் அரசாங்கத் தலைவர்களிடம் தெளிவுபடுத்திய பின்னர் அந்தச் செய்தி வெளியானது.

“என்றாலும் அந்தத் தலையீடு Syarikat Prasarana Negara Bhd நிற்வாகத்தில் சலசலப்பை ஏற்படுத்தி விட்டது. ஏனெனில் இதற்கு முன்னதாக அந்த நிறுவனம் செய்துள்ள மதிப்பீட்டு முடிவுகளுக்கு முரணாக அந்தச் செய்தி அமைந்திருந்தது.”

உண்மையில் அந்த திறந்த டெண்டர் மூலம் அந்தக் குத்தகையைப் பெற்ற நிறுவனம் PDA consortium ஆகும்.

2011ம் ஆண்டு டிசம்பர் 12ம் தேதி  Prasarana குழு நிர்வாக இயக்குநர் ஷாஹ்ரில் மொக்தார் நிதி அமைச்சுக்கு எழுதிய கடிதம் ஒன்றில் அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டத்துக்கு PDA consortium சிறந்த குத்தகையாளர் எனக் குறிப்பிட்டுள்ளார்.

நிதி அமைச்சுக்கும் பொறுப்பேற்றுள்ள நஜிப்புக்கு நேரடியாக அந்தக் கடிதம் முகவரியிடப்பட்டிருந்தது.

PDA consortium-க்கு ஏற்றுக் கொள்ளும் கடிதம் வெளியிடப்பட வேண்டும் என்றும் அந்தக் கடிதம் கேட்டுக் கொண்டது என ராபிஸி சொன்னார்.

“ஆகவே அண்மைய மாற்றங்கள் Prasarana-வின் முடிவை நஜிப் மாற்றினார் என்பதை உறுதிப்படுத்துகின்றது. அத்துடன் மக்கள் வரிப்பணத்தில் பில்லியன் கணக்கான ரிங்கிட் பெறும் பெரிய திட்டங்களுக்கு திறந்த டெண்டர் முறையை நிராகரித்துள்ளார்,” என அவர் குறிப்பிட்டார்.

 

TAGS: