அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் : முன்னாள் இசா கைதிகள்

1960ம் ஆண்டுக்கான உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட அனைத்து முன்னாள் கைதிகளிடமும் அரசாங்கம் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என ஜிஎம்ஐ என்று அழைக்கப்படும் இசா எதிர்ப்பு இயக்கம் கேட்டுக் கொண்டுள்ளது.

அந்த முன்னாள் கைதிகள் அனுபவித்த துயரங்களுக்காக அவர்களுக்கு இழப்பீட்டையும் அரசாங்கம் தர வேண்டும் என்றும் அவர்கள் கைது செய்தவர்கள் நீதிக்கு முன்பு நிறுத்தப்பட வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

விசாரணையின்றி தடுத்து வைக்கப்படுவதற்கு வகை செய்யும் அந்தச் சட்டம் இன்னும் குறிப்பிடப்படாத தேதியில் ரத்துச் செய்யப்படும் என பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் நேற்று அறிவித்ததைத் தொடர்ந்து ஜிஎம்ஐ அந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

“இசா-வினால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் அரசாங்கம் மன்னிப்புக் கேட்க வேண்டும்.

பாதிக்கப்பட்டவர்களும் அவர்களது குடும்பங்களும் அனுபவித்த சித்தரவதைக்கும் துயரங்களுக்கும் இழப்பீடும் கொடுக்கப்பட வேண்டும்.”

“அந்த இசா கைதிகளை சித்தரவதை செய்ததிலும் துன்புறுத்தியதிலும் சம்பந்தப்பட்ட அனைவரும் நீதியின் முன்பு நிறுத்தப்பட வேண்டும்,” ஜிஎம்ஐ தலைவர்  சையட் இப்ராஹிம் சையட் நோ கூறினார்.

அவர் இன்று அரசு சாரா அமைப்பான சுவாராமுடன் இணைந்து நடத்திய நிருபர்கள் சந்திப்பில் அவர் பேசினார். இழப்பீட்டுத் தொகை கைதிக்கு கைதி வேறுபடலாம் என அவர் சொன்னார். அவர்கள் தடுத்து வைக்கப்பட்டிருந்த காலம், அதனால் ஏற்பட்ட இழப்பு- அதில் வேலை இழப்பும் மன அதிர்ச்சியும் அடங்கும் என்றார் அவர்.

உண்மை, சமரச ஆணையம்

இசா சட்டம் ரத்துச் செய்யப்பட்ட பின்னர் உண்மை, சமரச ஆணையம் ஒன்றை அமைப்பது பற்றி அரசாங்கம் சிந்திக்க வேண்டும் என சுவாராம் இயக்குநர் குவா கியா சூங் கேட்டுக் கொண்டார். தென்னாப்பிரிக்காவில் இன ஒதுக்கல் முடிவுக்கு வந்த பின்னர் அத்தகைய ஆணையம் அமைக்கப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார். குவா 1989ம் ஆண்டு இசா சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.

இது நாள் வரையில் அந்தச் சட்டத்தின் கீழ் 10,000க்கும் மேற்பட்டவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். அதே வேளையில் அவசர காலச் சட்டம், அபாயகரமான போதைப் பொருள் சட்டம் போன்ற தடுப்புக் காவல் சட்டங்களின் கீழ் ஆயிரக்கணக்கான மக்கள் தடுத்து  வைக்கப்பட்டுள்ளனர்.

இன்னும் எஞ்சியுள்ள 30 இசா கைதிகள் விடுவிக்கப்பட்டு கமுந்திங் தடுப்பு முகாம் மூடப்பட்டு தென்னாப்பிரிக்காவில் ரோபன் தீவைப் போல பாரம்பரிய இடமாகப் பாதுகாக்கப்பட வேண்டும்  என்றும் ஜிஎம்ஐ கோரியது.

TAGS: