13வது பொதுத் தேர்தல்களுக்கான பார்வையாளர்கள் என ஐந்து அரசு சாரா அமைப்புக்களை இசி என்ற தேர்தல் ஆணையம் பெருமிதத்துடன் அறிவித்துள்ளது. ஆனால் NIEI என அழைக்கப்படும் National Institute for Democracy and Electoral Integrity தேசிய ஜனநாயக, தேர்தல் நேர்மைக் கழகம் இசி விடுத்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவில்லை.
இசி அறிவித்த ஐந்து தேர்தல் பார்வையாளர் அமைப்புக்களுடன் ஒப்பிடுகையில் NIEI வெளிநாடுகளில் தேர்தல்களை கண்காணிப்பதில் மிகவும் அனுபவம் வாய்ந்ததாகும்.
பார்வையாளர்கள் மீது இசி நிபந்தனைகளை விதிக்க விரும்புவதைத் தான் ஒப்புக் கொள்ளவில்லை என்று அது கூறியது.
பார்வையாளர்கள் தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறை ஏதும் இல்லை என்பதாலும் இசி வரைந்துள்ள வடிவமைப்பு, துணை அடிப்படையில் இருப்பதாலும் தமது அமைப்பு இசி அழைப்பை நிராகரிப்பதாக அதன் தலைவர் கே ஷான் கூறினார்.
“தேர்தல் திறந்த நடைமுறையாக இருப்பதை உறுதி செய்வதற்கு பார்வையாளர்கள் சுயேச்சையாகவும் குறிக்கோளுடனும் இயங்க வேண்டும். பார்வையாளர்கள் தொடர்பான சட்டப்பூர்வ நடைமுறைகள் ஏதுமில்லாத சூழலில் நாங்கள் எப்படி பார்வையாளர்களாக இயங்க முடியும் ?”
ஆப்கானிஸ்தான், பங்களா தேஷ், கம்போடியா, இந்தோனிசியா, தைவான் போன்ற 24க்கும் மேற்பட்ட நாடுகளில் நடத்தப்பட்ட அனைத்துலகத் தேர்தல் கண்காணிப்புப் பணிகளில் NIEI சம்பந்தப்பட்டுள்ளது.
அந்த அமைப்பு கடந்த மார்ச் மாதம் தேசிய வாக்காளர் பட்டியலை சுயேச்சையாக ஆய்வு செய்தது. வாக்காளர் முகவரிகளில் எட்டு விழுக்காடு செல்லத்தக்கதாக இல்லை என்பது அப்போது தெரிய வந்தது.
இசி அழைப்பை நிராகரித்துள்ள போதிலும் வெளிப்படையான போக்கையும் பொது மக்கள் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கு உதவியாக தேர்தல் பார்வையாளர்கள் தொடர்பான விதிமுறைகளைத் தயாரிப்பதற்கு NIEI, இசி-யுடன் தொடர்ந்து ஒத்துழைக்கும் என ஷான் வலியுறுத்தினார்.
சில பார்வையாளர் அமைப்புக்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளன
Ideas என்ற ஜனநாயக, பொருளாதார விவகாரக் கழகம், சுயேச்சையான கருத்துக் கணிப்பு மய்யமானமெர்தேக்கா மய்யம், Asli என அழைக்கப்படும் ஆசிய வியூக, தலைமைத்துவக் கழகம், TI-M என்ற அனைத்துலக மலேசிய வெளிப்படைக் கழகம், Proham என்ற மனித உரிமை மேம்பாட்டுக்கான சங்கம் ஆகியவையே இசி அறிவித்த ஐந்து அமைப்புக்களாகும்.
அந்த ஐந்து அரசு சாரா அமைப்புக்களும் சில நிபந்தனைகளுக்குக் கட்டுப்பட வேண்டும் என இசி கூறியுள்ளது. அந்த நிபந்தனைகளில் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்பதும் ஒன்றாகும்.
தேர்தல்களைக் கண்காணிப்பதில் அனுபவமும் தேர்தல் விவகாரங்களில் நிபுணத்துவமும் கொண்ட பல அமைப்புக்களை இசி புறக்கணித்துள்ளதாகத் தெரிகிறது.
அவற்றுள் Jom Pantau-வும் ஒன்றாகும். அது கீழ் நிலையில் தேர்தல்களைக் கண்காணிப்பதில் மிகவும் அனுபவம் உடையதாகும்.
இசி-யின் திட்டம் பயனுள்ளதாக இருக்காது என Jom Pantau அமைப்பின் தலைவர் அருள் பிரகாஷ் கூறினார். தேர்தல் பார்வையாளர்கள் இயங்குவதின் நோக்கமே இசி-யை கண்காணிப்பதாகும். ஆனால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகள் அதனை அனுமதிக்கப் போவதில்லை என்றார் அவர்.
“பார்வையாளர்கள் மீது இசி எந்தக் கட்டுப்பாடுகளையும் விதிக்கக் கூடாது. அவர்கள் ஊடகங்களிடம் பேசக் கூடாது என்றும் அது நிபந்தனை விதிக்கக் கூடாது.”