உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட(ஐஎஸ்ஏ)த்தின்கீழ் தங்கள் நாட்டவர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றி அந்தந்த நாட்டுத் தூதரகங்கள் அறியாதிருப்பதாக மனித உரிமை ஆணையம்(சுஹாகாம்) தெரிவித்துள்ளது.
சுஹாகாம் ஐந்து தூதரகங்களின் பிரதிநிதிகளிடம் பேசியதாகவும் அவை, அது பற்றித் தங்களுக்கு எதுவும் தெரியாது என்று கூறிவிட்டதாகவும் ஆணையர் ஜேம்ஸ் நாயகம் கூறினார்.
“நான் பிலிப்பீன்ஸ், ஸ்ரீலங்கா,இந்தியா,இந்தோனேசியா, வங்காள தேசம் ஆகிய நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டேன்.ஐஎஸ்ஏ-இன்கீழ் அவர்களின் குடிமக்கள் தடுத்து வைக்கப்பட்டிருப்பது பற்றித் தங்களுக்குத் தெரியாது என்று கூறிவிட்டனர்”, என்றவர் சொன்னார்.
எனினும் தடுத்துவைக்கப்பட்டவர்கள் பற்றிய முழு விவரங்களைத் தருமாறு அவர்கள் கேட்டுக்கொண்டார்கள்.
“அந்த விவரங்களுக்காக சிறைத்துறைக்கு எழுதிக் கேட்டிருக்கிறோம்”, என்றார்.
இதன் தொடர்பில் சுஹாகாம், வெளிநாடுகளில் உள்ள மனித உரிமை ஆணையங்களுடனும் தொடர்புகொண்டிருக்கிறது.
பாகிஸ்தான் மனித உரிமை ஆணையத்துடன் அது தொடர்புகொண்டதன் பயனாக அந்நாட்டு ஆணையம், அதன் அரசாங்கத்திடம் மலேசியாவில் தடுப்புக்காவலில் உள்ள அந்நாட்டு குடிமக்கள் மூவருக்கு உதவுமாறு கேட்டுக்கொண்டிருக்கிறது.
“பாகிஸ்தானிய கைதிகளுக்கு அவர்களுக்குரிய சட்ட உரிமைகள் மறுக்கப்படாதிருப்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று கோலாலம்பூரில் உள்ள தூதரகத்துக்கு உத்தரவிட வேண்டும்”, என்று அது கடந்த வாரம் அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.
மலேசியாகினி இந்தோனேசியா, ஈராக்,, பிலிப்பீன்ஸ், இலங்கை ஆகிய நாடுகளின் தூதரகங்களைத் தொடர்புகொண்டது.அவர்களின் பதில்களுக்காக அது இன்னமும் காத்திருக்கிறது.
கமுந்திங் தடுப்புமுகாமில் இன்னமும் எஞ்சியுள்ள 45 கைதிகளில் பாதிப்பேர் வெளிநாட்டைச் சேர்ந்தவர்கள் என்று தெரிகிறது.
அவர்களில் அறுவர் இந்தோனேசியர்கள், இருவர் இந்தியர்கள், எழுவர் இலங்கையர், ஒருவர் வங்காள தேசத்தவர், இருவர் ஈராக்கியர், மூவர் பிலிப்பினோக்கள்.
பயங்கரவாதம், ஆள்கடத்தல், போலி ஆவணங்கள் தயாரித்தல் போன்றவற்றில் ஈடுபட்டதற்காக அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.