தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என ஐஎஸ்ஏ கைதிகளுக்கு மிரட்டல்

 உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ஐஎஸ்ஏ) கைதிகளின் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று போலீஸ் சிறப்புப் பிரிவு (எஸ்பி) அதிகாரிகள் மிரட்டி வைத்திருப்பதாகக் கூறப்படுகிறது. அதன் காரணமாக கைதிகளில் இருவர், நேற்று வழக்குரைஞர்கள் குழு ஒன்று கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்றபோது அதனிடம் பேச மறுத்தனர்.

வழக்குரைஞர்களிடம் பேசினால் தடுப்புக்காவல் நீட்டிக்கப்படும் என்று எஸ்பி அதிகாரிகள்  எச்சரித்திருப்பதாகக் கைதிகளில் ஒருவர் தம்மிடம் தெரிவித்ததாக வழக்குரைஞர் அபிக் எம் நூர் கூறினார்.

அபிக்கும் மேலும் மூன்று வழக்குரைஞர்களும் நேற்று தடுப்பு முகாமுக்குச் சென்றபோது சகோதரர்களான கைதிகள் இருவர் முதலில் அவர்களுடன் பேச மறுத்தனர்.

ஐஎஸ்ஏ ஒழிப்பு இயக்கத்தைச் சேர்ந்த அபிக்கும் (வலம்), எட்மண்ட் போன், நு சின் இயு, சென் யென் ஹூய் ஆகியோரும் கைதிகள் ஒன்பதின்மர் விடுதலை கோரி உண்ணாநிலை போராட்டம் நடத்துவதை விசாரிப்பதற்காக கமுந்திங் முகாம் சென்றிருந்தனர்.

கைதிகளின் நிலை பற்றிக் குறிப்பிட்ட அபிக், “நன்றாகத்தான் காணப்பட்டார்கள்.ஆனால், களைத்து போயிருந்தனர்”, என்றார்.

கைதிகளில் ஒருவர் மட்டும் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டதை அடுத்து உண்ணாவிரதப் போராட்டத்தை முடித்துக்கொண்டிருக்கிறார்.

ஆனால், அவரை அக்குழுவினர் சந்திக்க முடியவில்லை. உணவருந்திய பின்னர் அவர் கமுந்திங்குக்குத் திருப்பி அனுப்பப்பட்டதாக அவர்களிடம் கூறப்பட்டது.

மே மாதம், உண்ணாவிரதமிருந்து அதை முடித்துகொண்ட பின்னர், கைதிகளில் இருவர்  கடந்த சனிக்கிழமை புதிதாக ஒரு உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினர்.

செவ்வாய்க்கிழமை மேலும் எழுவர் அவர்களுடன் சேர்ந்துகொண்டனர்.

தனிமைச் சிறைவைப்பு

தற்போது நான்கு கைதிகள் தனித்து சிறைவைக்கப்பட்டிருப்பதாக அபிக் கூறினார்.

கைதிகள் தடுத்து வைக்கப்பட்டிருப்பதற்கான காரணங்களை விவரிக்கும் ஆவணங்கள் இப்போது கிடைக்கப்பெற்றிருப்பதாகக் கூறிய அபிக், “அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து ஜிம்ஐ அவர்களின் குடும்பத்தாருடன் கலந்து ஆலோசிக்கும்”, என்றார்.

“பெரும்பாலும் ஆள்கடத்தல், பயங்கரவாதக் குற்றச்சாட்டுகளின்பேரில்தான் அவர்கள் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்”, என்று கூறியவர் அதற்கும் போதுமான ஆதாரங்கள் இல்லை என்றார்.

ஐஎஸ்ஏ–க்குப் பதிலாக பாதுகாப்புக் குற்றங்கள்(சிறப்பு நடவடிக்கை) சட்டம் கொண்டு வரப்பட்டிருப்பதால் ஐஎஸ்ஏ கைதிகள் அனைவரும் விடுவிக்கப்பட வேண்டும் என்று ஜிஎம்ஐ கோரிக்கை விடுத்துள்ளது.

தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்களில் சிலர், கைது செய்யப்பட்ட வேளையில் தாங்கள் குவாண்டானாமோ-பாணி சித்திரவதைகளுக்கு ஆளானதாக புகார் தெரிவித்துள்ளனர்.