பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசானைத் தூக்கில் போட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டதை ஸ்ரீ காடிங் எம்பி முகமட் அஜிஸ் மீட்டுக் கொண்ட போதிலும் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அதற்காக மன்னிப்புக் கேட்க வேண்டும் என அந்தத் தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பு வலியுறுத்தியுள்ளது.
முகமட் அஜிஸுக்கு ஊக்கமூட்டிய லெங்கோங் எம்பி சம்சுல் அனுவார் நாஸாராவையும்- அவரும் அம்னோவைச் சேர்ந்தவர்- கருத்தில் கொண்டால் அம்னோ தலைவர், ஆளும் கூட்டணியின் தலைவர் என்ற ரீதியில் நஜிப் பொறுப்பேற்குமாறு செய்யப்பட வேண்டும்.
“அம்னோ வன்முறைகளை விரும்பும் கட்சி இல்லை என்றால் அந்த அறிக்கையை மீட்டுக் கொண்டு அம்பிகா, நாடாளுமன்றம், நாடு ஆகியவற்றிடம் மன்னிப்புக் கேட்குமாறு அந்த இரண்டு எம்பி-க்களுக்கும் நஜிப் அல்லது பிஎன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் உடனடியாக உத்தரவிட்டிருக்க வேண்டும். அத்துடன் சம்பந்தப்பட்ட எம்பி-க்கள் மீது ஒழுங்கு நடவடிக்கையும் எடுத்திருக்க வேண்டும்.”
சுய மரியாதையுள்ள எந்தப் பிரதமரும் வெறுப்பைத் தூண்டும் அந்தக் கருத்துக்களை சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டார்.
“வெறுப்பைத் தூண்டும் இயக்கம்” தொடர்பில் பிரதமர் ஏதும் செய்யாவிட்டால் கனடிய Globe and Mail நாளேடு வழங்கிய ‘போலி ஜனநாயகவாத்’ என்னும் முத்திரை உறுதிப்படுத்தப்படும் என்பதில் சந்தேகமே இல்லை என பெர்சே செயலகம் எச்சரித்தது.
“மலேசியர்களைப் பொறுத்த அவரையில் தேர்தல் நாளில் அவர்கள் தங்கள் தீர்ப்பை வழங்குவர்.”