பயனீட்டாளர் அமைப்புகள் பிரதமருடன் நேரடி தொடர்பை விரும்புகின்றன

பயனீட்டாளர் அமைப்புகள் கூடுதல் வலிமைபெற்று விளங்க அவை பிரதமர்துறையின்கீழ் வைக்கப்பட வேண்டும் என்று மலேசிய பயனீட்டாளர் சங்கங்களின் கூட்டமைப்பு(போம்கா) விரும்புகிறது.

அப்போதுதான் பிரதமருக்குப் பல்வேறு பயனீட்டாளர் விவகாரங்களிலும் முடிவெடுப்பதற்கு வசதியாக இருக்கும்.13வது பொதுத் தேர்தலையொட்டி மலேசிய பயனீட்டாளர்களின் விருப்பப் பட்டியல் ஒன்றை முன்வைத்த போம்கா தலைவர் மாரிமுத்து நடேசன் இவ்வாறு கூறினார்.

இப்போது பயனீட்டாளர் அமைப்புகள், உள்நாட்டு வாணிகம், கூட்டுறவு, பயனீட்டாளர் விவகார அமைச்சின்கீழ் செயல்படுகின்றன.

“ ஒவ்வொரு பிரச்னைக்கும் ஒவ்வொருவரிடம் செல்ல வேண்டியுள்ளது.அசுத்தமான நீர் என்றால் சுகாதார அமைச்சுக்கு சென்று புகார் செய்ய வேண்டும்.பேருந்து பிரச்னை என்றால் போக்குவரத்து அமைச்சுக்குச் செல்ல வேண்டும்.

“பிரதமர்துறையின்கீழ் இருந்தால் அவரே சம்பந்தப்பட்ட துறைகளுக்குப் புகார்களை அனுப்பி அவற்றைக் கவனிக்குமாறு பணிக்க முடியும்”, என்று மாரிமுத்து பெட்டாலிங் ஜெயாவில் செய்தியாளர் கூட்டமொன்றில் கூறினார்.

பொதுமக்களைப் பெரும்பாலும் பாதிப்பவை பயனீட்டாளர் விவகாரங்கள்தாம் என்பதால் அவற்றின்மீது கவனம் செலுத்துவது முக்கியம் என்பதை மாரிமுத்து பொதுத் தேர்தலுக்குமுன் பரப்புரைகளில் ஈடுபடும் அரசியல்வாதிகளுக்கும் கட்சிகளுக்கும் நினைவுறுத்தினார்.

பயனீட்டாளர்களின் விருப்பத்தைக் கண்டறிய 2010-இலிருந்து 2011வரை போம்கா நாடு முழுக்க மேற்கொண்ட ஆய்வில், பொருள் விலைகள், வேலைவாய்ப்பு, பொதுப்போக்குவரத்து, சுகாதாரம் ஆகியவையே அப்பட்டியலில் முதலிடம் பெற்றிருந்தன.

“பொதுப்போக்குவரத்தைப் பொருத்தவரை கிள்ளான் பள்ளத்தாக்கில் போக்குவரத்தை மேம்படுத்துவதுமீது அதிகப்படியான கவனம் செலுத்தப்படுகிறது.ஆனால்,கிராமப் பகுதிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை”, என்றவர் சொன்னார்.

“சுகாதாரப்பாதுகாப்பைப் பொருத்தவரை அது தனியார்மயப்படுத்தப்படுவதை நாங்கள் விரும்பவில்லை”.

பொதுத்தேர்தலில் தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகள் இவை பற்றியும் நாடாளுமன்றத்தில் பேச வேண்டும், அரசியல் விவகாரங்களைப் பற்றியே சர்ச்சை செய்துகொண்டிருக்கக்கூடாது என்றவர் வலியுறுத்தினார்.

 

 

TAGS: