மலேசியாகினி செய்தி இணையத் தளம் மீது மீண்டும் இணையத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. நேற்று பிற்பகல் மணி 2.45க்குத் தொடங்கியது. அந்தத் தாக்குதல் தொடர்ந்த போதிலும் அந்த இணையத் தளச் சேவை இரவு மணி 11.30 வாக்கில் முழுமையாக மீண்டும் ஏற்படுத்தப்பட்டது.
மலேசியாகினி மீது மட்டும் தாக்குதல் நடத்தப்படவில்லை என்பது தெரிய வந்துள்ளது. இந்த நாட்டில் இயங்கும் பல இணையத் தளங்கள் மீதும் ஒரே நேரத்தில் தாக்குதல் தொடுக்கப்பட்டுள்ளது.
டிஏபி, பாஸ், பிகேஆர் போன்ற எதிர்க்கட்சிகளுக்கு சொந்தமானவை உட்பட அந்த இணையத் தளங்களில் பெரும்பாலானவற்றை இன்று காலை வரையில் திறக்க முடியவில்லை.
“பிற்பகல் தொடக்கம் டிஏபி, பாஸ், பிகேஆர் ஆகியவற்றின் இணையத் தளங்கள் மீது DDoS எனப்படும் ‘விநியோகச் சேவை மறுப்பு’ தாக்குதல் நடத்தப்படுகின்றது, அம்னோ/பிஎன் கீழறுப்புவாதிகள் 13வது பொதுத் தேர்தலுக்கு இதை விட கடுமையான DDoS தாக்குதலுக்கு ஒத்திகை பார்க்கின்றனர்,” என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் தமது டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மலேசியாகினி மீது நடத்தப்பட்ட தாக்குதல் இதுநாள் வரை நிகழ்ந்திராத மிகவும் சிக்கலான தாக்குதலாக இது தெரிகிறது. அது பல முனைத் தாக்குதல் முறை பின்பற்றப்பட்டுள்ளது. அதனை எளிதாக கண்டு பிடிக்க முடியவில்லை,” என மலேசியாகினி தலைமை நிர்வாக அதிகாரி பிரமேஷ் சந்திரன் கூறினார்.
“பெரும் எண்ணிக்கையிலான கணினிகளைக் கொண்டு மலேசியாகினியின் இணைய சர்வர்களில் ( servers ) போலியான போக்குவரத்தை ஏற்படுத்தி போக்குவரத்து நெரிசலைக் கொண்டு வருவதே அந்த தாக்குதல் நடவடிக்கை ஆகும். அவ்வாறு நெரிசல் ஏற்படும் போது சட்டப்பூர்வ பயனாளிகள் அந்த இணையத் தளத்தை அணுக முடியாமல் போய் விடும்.”
குறி வைக்கப்பட்ட இணையத் தளங்களை சீர்குலைக்கும் பொருட்டு ஊதியம் கொடுக்கப்படும் அனைத்துலகக் கும்பல்கள் அத்தகைய இணையத் தாக்குதல்களை மேற்கொள்கின்றன.
என்றாலும் மலேசியாகினி தொழில்நுட்பக் குழு எட்டு மணி நேரம் போராடிய பின்னர் இணையத் தளத்துக்கு மீண்டும் உயிர் கொடுத்தது.
கடந்த ஒர் ஆண்டில் மட்டும் மலேசியாகினி பல முறை இணையத் தாக்குதல்களுக்கு இலக்காகியுள்ளது.
அவற்றுள் பெர்சே 2.0, பெர்சே 3.0 பேரணிகள், சரவாக் மாநிலச் சட்டமன்றத் தேர்தல் ஆகியவை நிகழ்ந்த போது நடத்தப்பட்ட இணையத் தாக்குதல்கள் குறிப்பிடத்தக்கவை.