ஒரே மலேசியா இன்னும் மலேசியர்களைக் கவரவில்லை

இந்த நாட்டில் இன ஐக்கியத்தை ஏற்படுத்துவதற்கான முயற்சிகளுக்கு சமூகங்களைப் பிரித்து வைக்க வேண்டும் என சீன கல்வியாளர்கள் வலியுறுத்துவதே தடையாக இருப்பதாக முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார்.

“நாங்கள் அது குறித்து ஏதாவது செய்ய முயன்றோம். ஆனால் அவற்றுக்கு ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. எடுத்துக்காட்டுக்கு நாம் மலாய், சீன, இந்தியப் பள்ளிக்கூடங்களை வைத்திருக்கிறோம். -அந்தப் பள்ளிக்கூடங்களை ஒரே வளாகத்துக்குள் வைத்திருப்போம். அதன் வழி மாணவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டு இது பல இன நாடு என்பதை அறிந்து கொள்வர் என யோசனை கூறினோம்.”

ஆனால் அதனை சீன கல்வியாளர்கள் கடுமையாக எதிர்த்தனர், தங்கள் பிள்ளைகள் மலாய் பிள்ளைகளுக்கு அருகில் செல்வதை அவர்கள் விரும்பவில்லை. அது தான் அவர்களுடைய எதிர்ப்பின் தாக்கம். அது இனவாதம் இல்லை என்றால் அது என்னவென்று எனக்குத் தெரியவில்லை,” என MobTV என அழைக்கப்படும் மலேசிய பார்வையாளர் இணைய வீடியோ தளத்திற்கு அளித்த பேட்டியில் கூறினார்.

பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கின் ஒரே மலேசியா கொள்கை மலேசியர்களை கவர்ந்துள்ளதா என அந்த இணையத் தளத்தின் ஜஹாபர்தின் முகமட் யூனோஸ் எழுப்பிய கேள்விக்கும் மகாதீர் பதில் அளித்தார்.

அது பற்றிக் குறிப்பிட்ட அவர்,” இல்லை இப்போது இல்லை. இன்னும் மக்கள் தங்களைப் பற்றியும் தங்கள் இனம், உரிமைகள், சலுகைகள் பற்றி மட்டுமே பேசிக் கொண்டிருக்கிறார்கள்,” என்றார்.

“சலுகைகள் என்பது மலாய்க்காரர்களுக்கு அல்லது பூமிபுத்ராக்களுக்கு மட்டும் வழங்கப்படவில்லை என்பதை நீங்கள் நினைவில் கொள்ள வேண்டும். மலாய்க்காரர் அல்லாதாரும் சலுகைகளைப் பெற்றுள்ளனர். ஏனெனில் இந்த நாடு ஒன்றில் மட்டுமே  அவர்கள் தங்கள் மொழியையும் பண்பாட்டையும் பள்ளிக்கூட முறையையும் பெற்றிருப்பதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர்.”

“நாம் அனைவரும் ஒன்றல்ல. மக்கள் பிருந்து நிற்பதையே நாம் பார்க்கிறோம். பிரிட்டிஷ்காரர்களின் கீழ் இந்தியர்கள் தோட்டங்களில் வாழ்ந்தார்கள். மலாய்க்காரர்கள் கிராமப்புறங்களிலும் சீனர்கள் நகரங்களிலும் வசித்தனர்,” என்றார் அவர்.

கடந்த வியாழக் கிழமை இணையத்தில் சேர்க்கப்பட்ட அந்த பேட்டியில் “மலேசியருக்கு மலேசியா” என்ற கோட்பாட்டையும் சாடினார்- அது டிஏபி-யின் சுலோகமாகும். அது சிங்கப்பூர் பிஏபி-யிடமிருந்து பெறப்பட்டதாகும்- மலேசியருக்கு மலேசியா வலியுறுத்தும் சமநிலை  “குறைந்த ஆற்றலைக் கொண்ட இனத்துக்கு” வழங்கப்படும் சில அனுகூலங்களை அகற்றி மற்றவர்கள் “எல்லாவற்றையும் தங்களுக்கே எடுத்துக் கொள்ளுமாறு செய்வதை நோக்கமாகக் கொண்டது என்றும் மகாதீர் கூறினார்.

 

TAGS: