அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும் வெட்டி கொண்டு மடிவதா வீரம்? இந்திய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்

-டாக்டர் சேவியர் ஜெயக்குமார், சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர், ஜூன் 30, 2012.

திரவிட இனத்தின் தனித்தன்மையே  அகிம்சையாகும், அதனாலேயே ஆரியர்கள் சுலபமாக, ஹரப்பா, மொகஞ்சடாரோ நாகரீகங்களை அழித்து இந்தியாவில் கால் ஊன்றினார்கள் என்கிறது  சரித்திரம்.

 

சூரியனே அஸ்தமிக்காத பிரிட்டீஸ் சாம்ராஜியத்தையே எதிர்க்க அகிம்சையைச் சிறந்த ஆயுதமாக மகாத்மா காந்தி ஏந்தி வெற்றியும் கண்டார். இந்தியர்களின் பெருமையை உலகின் உச்சிக்கும் கொண்டு சென்றார். ஆனால்  அகிம்சைக்குச் சொந்தக்காரர்கள் தினமும்  அவர்களுக்குள் வெட்டி கொண்டு மடிவது தேவையா, அவசியமா, தர்மா என்று  இந்திய இளைஞர்கள் எண்ணிப் பார்க்க வேண்டும்.

 

அன்பே சிவம் என்ற மந்திரத்தை ஒதுகிறோம், ஆனால் ஆடு, மாடுகளை அறுப்பது போன்று பணத்துக்கும், பதவிக்கும், அர்த்தமற்ற  உணர்வுகளுக்கும் ஆட்பட்டு  வாழ வேண்டியவர்களை  அழித்து அவர் குடும்பத்தையும், தங்கள் குடும்பத்தையும் அழித்துக் கொள்ளும் படுபாதகச் செயல்களில் இந்தியர்கள் ஈடுப்படுவது  மன்னிக்க முடியாத குற்றம். 

 

குற்றச் செயல்களால்  பாதிக்கப்பட்ட பல குடும்பங்கள் பற்பல விதமான உதவிகளுக்கு எங்கள் சமூகநலப் பிரிவுகளின்  உதவிகளை நாடி வருகின்றனர். மற்ற அரசியல் கட்சிகளின் உதவிகளை நாடியும் செல்கின்றனர்.

 

 குற்றசெயல்களால் பாதிக்கப்படும் பிள்ளைகளுக்கும் குடும்பங்களுக்கும் கிடைப்பதோ சிறிய உதவித்தான். அதனால் அவர்களுக்கு அரைவயிறு கஞ்சிதான் கிடைக்கும். ஆனால்  உடையவர்கள் அவர்களுடன் இருந்தால்  அக்குடும்பங்கள்   அனுபவிக்க வேண்டிய அன்பையும்,  இன்பத்தையும், பெருமையையும் எந்த அரசாங்கத்தாலும், எந்தத் தர்மத்தாலும் ஈடுகட்ட முடியாது என்பதனை  நம் இளைஞர்கள் எண்ணிப் பார்க்கவேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

 

குற்றச் செயல்களில் ஈடுப்படுபவர்கள் மற்றவர் சொல்லித்தான் திருந்த வேண்டும் என்பதல்ல.  இந்திய சமுதாயத்தில் நடந்து வரும் குற்றசெயல்கள் குறித்து ஒவ்வொரு நாளும் தமிழ் பத்திரிக்கைகளில் வெளிவரும்  செய்திகளைப் பாருங்கள், இன்றைய தமிழ் நாளிதழ்களில் வந்துள்ளச் செய்திகள்  நெஞ்சில் உதிரத்தை  வரவைக்கிறது.

 

குற்றச் செயல்களில் ஈடு படுவபர்கள் இழவு வீட்டுகளுக்கு சென்று, பிள்ளையை, கணவனை, தந்தையை இழந்தவர்கள் கதறுவதைத் தயவு செய்து கொஞ்சம் காதில் வாங்குங்கள். மீண்டும் ஒரு குடும்பத்தலைவனை, இன்னொரு உயிரை  வாங்க மனம் துணியுமா? பாதிக்கப்பட்டவர்களின்  துயரக் கதறல்கள் கல்லையும் கரைக்கும் சக்தியுடையது. பாதிக்கப்பட்ட குடுபங்கள் அனுபவிக்கும்  துன்பங்களைச் சீர் தூக்கிப் பார்க்க வேண்டும் என்று அன்போடு  கேட்டுக் கொள்கிறேன்.

 

இந்நாட்டில் அரசியல் ரீதியாக எந்த வெற்றியையும் பெறலாம். பொருளாதார ரீதியாக  எந்தச் சிகரத்தையும் அடையலாம்.  ஆனால் வாழ வேண்டியவர்கள்  வெட்டி வீழ்த்திவிட்டு, வழி காட்டவேண்டியவர்களை ஒரு குடும்பத்திடமிருந்து பறித்துவிடுவதால், இச்சமுதாயத்துக்கு ஏற்படும் பாதகச் செயல்கள், எவ்வெற்றியாலும் ஈடு செய்ய முடியாது என்பதனை அனைவரும் நினைவில் கொள்ள வேண்டும்.

 

எல்லா அரசியல், சமூகச், சமய இயக்கங்களும் இணைந்து, நம் இளைஞர்களிடம்  காணப்படும்  குற்றச் செயல்களைத் துடைத்தொழிக்க ஒன்று பட்டு செயல் பட வேண்டும். இம்மாநில அரசும்,பக்காத்தானும் எல்லா வகையிலும்  இந்திய இளைஞர்களிடையே காணப்படும்  குற்றச் செயல்களைக்  கலைய ஒத்துழைக்கத் தயாராக இருக்கிறது.  இதில் எவருக்கும் எந்தப் பாகுபாடும் காட்டப்படக் கூடாது. இந்தியச் சமுதாயம் ஒன்றுப்பட்டு இந்தக் கொலை வெறியை ஒழிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

TAGS: