மருத்துவக் கல்வியை வாணிபமாக்காதே; மசோதாவை மறு ஆய்வு செய்!

 
-கா. ஆறுமுகம் தலைவர், சுவராம் மனித உரிமைக்கழகம், June 30, 2012. 
 
அரசாங்கம் மருத்துவக் கல்வியை வாணிபமாக்கக்கூடாது. தற்போது நடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருக்கும் மருத்துவச் சட்டம் 1971 மீதான சட்ட திருத்த மசோதா தனியார் மருத்துவ கல்லூரிகள் வாணிப வகையில் பயனடையும் தன்மைகளைக் கொண்டுள்ளன.
 
நமது நாட்டில் 1971-இல் மூன்று அரசாங்க மருத்துவக் கல்லூரிகள் மட்டுமே இருந்தன. ஆனால் இன்று 33 கல்லூரிகள் உள்ளன. அவற்றில் 22 கல்லூரிகள் தனியார்மயமானவை.
 
மருத்துவக் கல்லூரிகளிலிருந்து வெளியாகும் மருத்துவர்கள் தரமான கல்வியையும் பயிற்சியையும் பெற்றிருப்பதை உறுதி செய்ய மருத்துவச் சட்டம் 1971 போதுமான அமுலாக்க முறைகளை கொண்டிருந்தது. அவற்றில் முக்கியமான ஓன்று அவற்றின் தரத்தை மலேசியா மருத்துவ மன்றம்தான் (Malaysian Medical Council) முடிவு செய்யும். அதாவது ஒரு மருத்துவ கல்லூரி தரமானதா என்பதை அது சார்ந்த நிபுணத்துவ அமைப்பான மலேசியா மருத்துவ மன்றத்தால்தான் அப்பணியை முறையாக செய்ய இயலும்.
 
இந்தச் சட்டத் திருத்த மசோதாவில், அந்த முக்கியமான பொறுப்பை உயர்கல்வி அமைச்சு எடுத்துக்கொள்ள வரையருக்கப்பட்டுள்ளது. இந்த மசோதாவில் உள்ள சரத்து 3 மற்றும் சரத்து 7 இந்த மாற்றத்தை கொண்டுள்ளன.
 
தற்போது நமது நாட்டில் உள்ள 33 மருத்துவ கல்லூரிகள் வழி வெளியாகும் சுமார் 3,500 மருத்துவர்களுக்கு முறையான அவுஸ்மன் (Houseman) எனப்படும் ஆரம்ப கால மருத்துவப் பயிற்சிகள் கிடைப்பது அரிதாகிவுள்ளது. இருந்தும் மருத்துவ படிப்பை வாணிபநோக்கோடு நடத்திவரும் கல்லூரிகள் அதை கல்வி என்பதைவிட வியாபாரமாகவே பார்க்கின்றனர்.
 
முன்பு அரசாங்கத்தின் கீழ் மருத்துவ படிப்பு இருந்த போது வாணிப நோக்கம் கிடையாது. ஆனால் தற்போது ஒரு நபர் மருத்துவம் பயில சுமார் ரிம 250,000 முதல் ரிம 500,000 வரை செலவிட வேண்டியுள்ளது. இதன்வழி தனியார்மய கல்லூரிகள் வருடம் ஒன்றுக்கு சுமார் ரிம75 (RM 750,000,000) கோடியை வசூல் செய்கின்றனர்.                     
 
தற்போது கொண்டுவரப்பட்டுள்ள சட்டத் திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டால், நமது நாட்டின் மருத்துவ கல்வி என்பதன் தரம் கேள்விக்குறியாகும், அதன் நோக்கம் வாணிபமாகும். எனவே நமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இதை ஆதாரிப்பதற்கு முன்பாக முறையான ஆய்வை மேற்கொள்ள வேண்டும்.   
 

TAGS: