ISA கைதியான மகனைச் சந்திக்கச் சென்ற தந்தை டி-சட்டையைக் கழட்டுமாறு கட்டாயப்படுத்தப்பட்டார்

உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்ட (ISA) கைதியாக உள்ள மகனைச் சந்திக்க கமுந்திங் தடுப்பு முகாமுக்குச் சென்ற ஒரு தந்தையிடம் அவர் அணிந்திருந்த பிரச்னைக்குரிய டி-சட்டையைக் கழற்றினால்தான் மகனைப் பார்க்க முடியும் என்று கூறப்பட்டது.

பட்சுல்லா என்ற அக்கைதியின் தந்தையின் டி-சட்டையில் ‘ஐஎஸ்ஏ-யை ஒழியுங்கள்’ என்று எழுதப்பட்டிருந்ததுதான் பிரச்னைக்குக் காரணம் என்று ஐஎஸ்ஏ ஒழிப்பு இயக்கத்தின்(ஜிஎம்ஐ) செயலவை உறுப்பினர் அலிஜா ஜாப்பார் கூறினார்.

“முதலாவது பாதுகாப்புச் சோதனைத் தடுப்பை அடைந்தபோது சாதாரண உடை அணிந்திருந்த அம்முகாமின் பாதுகாப்பு அதிகாரி அப்துல் ரசாக்கைத் தடுத்தார்.அவர் அணிந்துள்ள டி-சட்டை பிரச்னைக்குரியது என்றார்.

“ஐஎஸ்ஏதான் எடுக்கப்பட்டுவிட்டதே.பிறகு ஏன் பிரச்னை வரப்போகிறது என்று அவர்களிடம் கூறினோம்.அப்துல் ரசாக்கும் தம்மிடம் அணிந்துகொள்ள வேறு எதுவும் இல்லை என்றார்.ஆனால்,அவர்கள் பிடிவாதமாக இருந்தனர்”. அச்சம்பவம் பற்றி மனித உரிமை  ஆணையத்திடமும்(சுஹாகாம்) புகார் செய்யப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

45தடுப்புக் காவல் கைதிகளையும் உடனடியாக விடுவிக்க வேண்டும் என்ற கோரிக்கை விடுக்கும் ஜிஎம்ஐ மகஜர் ஒன்றையும் பெற்றுக்கொண்ட  சுஹாகாம் ஆணையர் முகம்மட் ஷா’அனி அப்துல்லா, சிறைக்காவலர்களின் செயலைக் கண்டித்தார்.

இவ்வாரம் சுஹாகாம் அம்முகாமுக்குச் செல்லும்போது இப்புகார் பற்றி அதிகாரிகளிடம் விசாரிக்கப்படும் என்றாரவர்.

TAGS: