ராபிஸி: எம்ஆர்டி திட்டம் 100 பில்லியன் ரிங்கிட்டாக அதிகரிக்கக் கூடும்

நாட்டின் எம்ஆர்டி திட்டத்துக்கான செலவுகள் 100 பில்லியன் ரிங்கிட்டுக்கு உயரக் கூடும் என பிகேஆர் வியூக இயக்குநர் ராபிஸி ராம்லி கூறுகிறார். அந்தத் தொகை, தொடக்க மதிப்பீட்டைக் காட்டிலும் மும்மடங்கு அதிகமாகும்.

நான் Spad என்னும் நிலப் பொதுப் போக்குவரத்து ஆணையத்தில் வேலை செய்கின்றவர்களுடன் உரையாடிய போது அவர்கள் 100 பில்லியன் ரிங்கிட் இலக்கைக் குறிப்பிட்டுப் பேசினர். தொடக்கத்தில் அந்தத் திட்டத்துக்கு 37 பில்லியன் ரிங்கிட் செலவாகும் என மதிப்பிடப்பட்டது. பின்னர் அது 50 பில்லியன் ரிங்கிட்டாகவும் 60 பில்லியன் ரிங்கிட்டாகவும் உயர்ந்தது,” என அவர் பெட்டாலிங் ஜெயாவில் பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் கூறினார்.

தமது எண்ணத்துக்கு ஆதாரம் ஏதும் உள்ளதா என ராபிஸியிடம் வினவப்பட்டது. அதற்குப் பதில் அளித்த அவர்,” இது போன்ற திட்டங்கள் என வரும் போது நான் துணிந்து சொல்வேன்,”என்றார்.

“எம்ஆர்டி மிகப் பெரிய பொதுத் துறைச் செலவினமாகவும் மக்கள் தாங்கிக் கொள்ள வேண்டிய கடனாகவும் இருக்கப் போகிறது. எம்ஆர்டி திட்டம் முறையாக செய்யப்படுவதை உறுதி செய்து கொள்வதற்கு நாம் அந்தத் திட்டம் மீதான அனைத்தையும் கவனமாக ஆய்வு செய்ய வேண்டும். இல்லை என்றால் அந்தக் கடன், இரண்டு மூன்று தலைமுறைகளுக்கு நாட்டை அடிமைப்படுத்தி விடும்,” என்றார் அந்த பிகேஆர் வியூக இயக்குநர்.

எம்ஆர்டி போன்ற பொது அடிப்படை வசதித் திட்டங்கள் ரகசியமாகவும் திரைமறைவிலும் நிர்வாகம் செய்யப்படுவதால் உறுதியான புள்ளிவிவரங்களை வெளியிடுவது மிகவும் சிரமம் என அவர் குறிப்பிட்டார்.

“நான் கெட்ட பையனாகவே இருந்து அந்த மதிப்பீட்டை வெளியிட்டு அரசாங்கத்தை தற்காப்பு நிலையில் வைக்க விரும்புகிறேன்.  அந்தத் திட்டத்துக்கான விலையைக் கட்டுப்படுத்துவதற்கு நான் சொல்வது உண்மையா இல்லையா என்பதை எங்களுக்கு நிரூபித்துக் காட்டுங்கள்.”

“பொது மக்களுடைய ஆய்வு இல்லாமல் அவர்களுடைய சொந்த முடிவுக்கு நீங்கள் அவர்களை விட்டு விட்டால் கடந்த காலத் திட்டங்களில் நிகழ்ந்தது இதிலும் ஏற்படும்,” என்றார் ராபிஸி.

தகுதி இல்லாத நிறுவன என தாம் கருதும் நிறுவனம் ஒன்றுக்கு அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் வழங்கப்பட்டதைப் போன்று எம்ஆர்டி திட்டமும் மாறக் கூடாது என்பதற்காக தாம் சிவப்புக் கொடியை முன்கூட்டியே உயர்த்துவதாகவும் அவர் சொன்னார்.

எம்ஆர்டி திட்டம் மொத்தம் 150 கிலோமீட்டர் நீளத்தைக் கொண்ட மூன்று தடங்களாகும். பொதுப் போக்குவரத்தை மேம்படுத்தும் நோக்கம் கொண்ட அரசாங்க உருமாற்றத் திட்டத்தின் ஒரு பகுதியாக அது தொடங்கப்பட்டுள்ளது.

 

TAGS: