கான்பெரா-கோலாலம்பூர் அகதிகள் பரிவர்த்தனை உடன்பாடு தோல்வி காணுமா?

அடைக்கலம் தேடி ஆஸ்திரேலியாவில் தஞ்சம் புகுந்துள்ளவர்களை மலேசியாவுக்கு நாடு கடத்துவதற்கு ஆஸ்திரேலியா வகுத்துள்ள திட்டம் தோல்வி காணும் நிலை ஏற்பட்டுள்ளது.

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் அந்த உடன்பாட்டுக்கு ஆதரவான சட்டத்தை கடுமையாக குறை கூறியிருப்பதால் அது தோல்வி அடையும் என கருதப்படுகிறது.

மலேசியாவிலிருந்து 4000 அகதிகளை ஏற்றுக் கொள்வதற்கு ஈடாக ஆஸ்திரேலியாவில் அடைக்கலம் புகுந்துள்ள 800 பேரைத் திருப்பி அனுப்புவதற்கு வகை செய்யும் அந்த உடன்பாட்டை நிறைவேற்றுவதற்கு ஆஸ்திரேலியப் பிரதமர் ஜுலியா கில்லர்ட் போராடி வருகிறார்.

கடந்த மாதம் அந்த உடன்பாட்டை நிராகரித்த உயர் நீதிமன்றம், போதுமான பாதுகாப்பு இல்லாத ஒரு நாட்டுக்கு படகு மக்களை கான்பெரா அனுப்பக் கூடாது எனத் தீர்ப்பளித்தது. 

அதனைத் தொடர்ந்து அகதிகள் பரிவர்த்தனை தொடருவதற்கு உதவியாக குடிநுழைவுச் சட்டத்தை திருத்த கில்லர்ட் முயற்சி செய்தார்.

இதனிடையே மேற்கு சிட்னியில் அந்தத் திருத்தங்களை ஏற்றுக் கொள்ளுமாறு எதிர்க்கட்சித் தலைவர் டோனி அபோட்டைக் கேட்டுக் கொள்ளும் பொருட்டு குடிநுழைவு அமைச்சர் கிறிஸ் போவன் நடத்திய திறந்த வெளி நிருபர்கள் சந்திப்புக்கு ஆர்ப்பாட்டக்காரர்கள் இடையூறு செய்தனர்.

ஆஸ்திரேலியாவுக்கு வெளியில் அகதிகளை பரிசீலனை செய்யக் கூடாது என உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை ஏற்றுக் கொள்ளுமாறு அவர் அபோட்டை கேட்டுக் கொண்டார்.

நாடாளுமன்றம் சட்டத்தை நிறைவேற்றினால் தவிர ஆஸ்திரேலியா, பாப்புவா நியூ கினி, நாவ்ரு தீவுகள் இப்போது மலேசியா உட்பட எந்த இடத்திலும் நாம் அகதிகளை பரிசீலனை செய்ய முடியாது என அவர் சொன்னார்.

அந்த மசோதா நிறைவேற்றப்படுவதற்கு எதிர்க்கட்சித் தலைவர் அபோட்டின் ஆதரவு மிகவும் அவசியமாகும்.

குடிநுழைவுச் சட்டத் திருத்தங்களை தமது லிபரல் கட்சி ஏற்றுக் கொள்வதா இல்லையா என்பதை இன்னும் முடிவு செய்யவில்லை என அபோட் ஏற்கனவே கூறியுள்ளார்.

அத்துடன் அந்த சட்டத் திருத்த முன் வரைவுகள் குறித்து தாம் “கவலைப்படுவதாகவும்” அவர் சொன்னார்.

கன்சர்வேடிவ் கட்சித் தலைவர் ஜோன் ஹோவார்ட் அரசாங்கத்தில் இருந்த போது அடைக்கலம் புகுந்தவர்களை மற்ற நாடுகளுக்கு அனுப்புவதற்கு அபோட் ஆதரவு தெரிவித்திருந்தார்.

புதிய சட்டங்கள் படகு மக்களுக்கான பாதுகாப்புக்களை அகற்றுகிறது என்றும் அவர்களை “கரைக்கு அப்பால் குவிப்பதற்கு” அது ஒப்பாகும் என்றும் அவர் சொன்னார்.

ஹோவார்ட் அரசாங்கம் அவசியம் எனக் கருதிய பாதுகாப்பு அம்சங்கள் சட்ட முன் வரைவில் காணப்படவில்லை என்றார் அவர்.

ஆனால் அந்த பாதுகாப்பு அம்சங்கள் மலேசியாவுடன் செய்து கொள்ளப்பட்ட இரு வழி ஏற்பாட்டில் அடங்கியிருப்பதாக போவன் கூறினார்.

“மலேசியாவுடனான ஏற்பாட்டில் மனித உரிமைப் பாதுகாப்பு அம்சங்களும் இடம் பெற்றுள்ளன- அந்த மக்களை கௌரவத்துடனும் மரியாதையுடனும் நடத்த மலேசியாவும் ஒப்புக் கொண்டுள்ளது”, என அவர் தெரிவித்தார்.

மலேசியா ஆஸ்திரேலியா அகதிகள் பரிவர்த்தனை உடன்பாடு, மனிதர்கள் கடத்தப்படுவதை தடுக்கும் வட்டார ஏற்பாட்டின் ஒரு பகுதி என கான்பெரா கூறுகிறது. ஆனால் அகதிகள் மீதான தங்களது பொறுப்புக்களை ஆஸ்திரேலியா கை கழுவுவதாக எதிர்ப்பாளர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

செய்தி நிறுவனங்கள்