மெட்ரிக்குலேசன்: இந்திய மாணவர்களுக்கான இடங்கள் குறித்த அரசாங்கத்தின் கொள்கைதான் என்ன?

கடந்த திங்கள்கிழமை துணைப் பிரதமரும் கல்வி அமைச்சருமான மொகைதின் யாசின் மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் பயில்வதற்கு இந்திய மாணவர்களுக்கு 557 இடங்கள் ஒரே ஒரு முறைதான் என்ற அடிப்படையில் வழங்கப்படும் என்று அறிவித்தார்.

இவ்வாண்டு பெப்ரவரில் பிரதமர் நஜிப் ரசாக் இந்திய மாணவர்களுக்கு மெட்ரிக்குலேசன் வகுப்புகளில் கூடுதல் 1000 இடங்கள் கொடுக்கப்படும் என்று அறிவித்தார்.

இதற்கான வேண்டுகோளை மஇகா தலைவர் ஜி.பழனிவேல் கடந்த ஆண்டு ஜூலையில் நடந்த மஇகா பேராளர் மாநாட்டில் விடுத்திருந்தார். கடந்த ஆண்டில் இந்திய மாணவர்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடங்கள் 539 ஆகும்.

ஆக மொத்தம் எத்தனை இடங்கள்: பிரதமர் அறிவித்திருந்த 1000; மொகைதின் கூறுகின்ற 557. இவை அனைத்தும் அடுத்து வரும் ஆண்டுகளில் கொடுக்கப்படுமா?

நேற்று காலை மணி 11.00 அளவில் புத்ராஜெயாவில் பிரதமர் மற்றும் துணைப் பிரதமர் அலுவலக அதிகாரிகளிடம் வழங்கிய ஒரு மகஜரில் இக்கேள்வியை அரசு சார்பற்ற அமைப்புகளான நியட்டும் (Niat) மியட்டாவும் (Mieta) எழுப்பியுள்ளன.

மெட்ரிக்குலேசன் வகுப்பு மீதான அரசாங்கத்தின் கொள்கை என்ன? மொத்த இடங்கள் எத்தனை? அவற்றில் பூமிபுத்ராக்களுக்கு 90 விழுக்காடு இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. 10 விழுக்காடு பூமிபுத்ரா அல்லாதவர்களுக்கு. இது மேலும் இந்தியர், சீனர், மற்றவர்கள் என்று பிரிக்கப்படுமா? இந்திய முஸ்லிம்கள் எந்தப் பிரிவில் வகைப்படுத்தப்பட்டுள்ளனர்: பூமிபுத்ராவா அல்லது பூமிபுத்ரா அல்லாதவரா?

“எழுப்பப்பட்டுள்ள இப்பிரச்னைகளுக்கு மிகவும் வெளிப்படையான மற்றும் உண்மையான விளக்கத்தைப் பெற இந்திய மலேசிய சமூகம் ஆவலோடு எதிர்ப்பார்த்திருக்கிறது”, என்று நியட்டின் தலைவர் தஸ்லிம் இப்ராகிம் வழங்கிய மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உண்மையான நிலவரத்தை மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டிய கடப்பாடு கல்வி அமைச்சுக்கு உண்டு என்பதை வலியுறுத்திய தஸ்லிம் இப்ராகிம், மகஜரில் எழுப்பப்பட்டுள்ள கேள்விகளுக்கு பதில் கிடைக்கும் என்று தாம் உறுதியாக நம்புவதாகக் கூறினார்.