நாடற்ற மலேசியருக்கு குடியுரிமை இயல்பாகவே கிடைக்க வேண்டும்

நாடற்ற மலேசியர்கள்- பிறப்புச் சான்றிதழ் அல்லது நீலநிற மைகார்ட் வைத்திராதவர்கள்-வெளிநாட்டவர் அல்லர். எனவே அவர்கள் குடியுரிமைக்கு விண்ணப்பம் செய்ய வேண்டிய அவசியம் இல்லை என்கிறது பிகேஆர்.

இன்று கிள்ளான் தேசிய பதிவுத்துறை (என்ஆர்டி) அலுவலகத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்றுக்குப் பின்னர் இவ்வாறு கூறிய பிகேஆர் உதவித் தலைவர் என்.சுரேந்திரன், அந்த அலுவலகத்தில் கொடுக்கப்பட்ட விண்ணப்பப் பாரங்களை நிராகரிக்குமாறு  தம்முடன் வந்திருந்தோரைக் கேட்டுக்கொண்டார்.

“என்ஆர்டி குடியுரிமை விண்ணப்பப் பாரங்களைக் கொடுக்கிறது. நாமும் விண்ணப்பிக்கிறோம். அது சரியல்ல.இவர்களை அரசாங்கம் அந்நியர்கள்போல் நடத்தினாலும் இவர்கள் அந்நியர்களல்லர்”, என்றாரவர்.

இந்நாட்டில் பிறந்திருந்தாலும் நாடற்ற மக்களான அவர்களை அரசமைப்பின் 16ஆம் 19ஆம் பகுதிகளின்கீழ் அரசாங்கம் அந்நியர்கள்போலத்தான் நடத்துகிறது.

“அவர்கள் இங்கு பிறந்தவர்கள்,காலம் பூராவும் இங்கேயே வாழ்ந்திருப்பவர்கள். அவர்களை அரசமைப்பின் 14வது பகுதியின்கீழ் வைத்து அவர்கள் இயல்பாகவே குடியுரிமை பெறுவதற்கு வகை செய்ய வேண்டும்”, என்றாரவர்.

நாடற்ற மக்களின் அவலத்தை வெளிச்சம்போட்டுக் காண்பிக்க ஜாலான் காப்பாரில் உள்ள என்ஆர்டி அலுவலகத்தில் இன்று காலை மணி 10.30க்கு பிகேஆர் ஏற்பாடு செய்திருந்த அந்த ஆர்ப்பாட்டத்தில் நாடற்ற இந்தியர்கள் உள்பட சுமார் 100பேர் கலந்துகொண்டனர்.

வேர்கள் இங்கே ஆனாலும் குடியுரிமை இல்லை

ஆர்ப்பாட்டத்தில் சுரேந்திரனுடன் சுதந்திரத்துக்கான வழக்குரைஞர் அமைப்பைச் சேர்ந்த லத்திபா கோயா, காப்பார் எம்பி எஸ்.மாணிக்கவாசகம், கிள்ளான் எம்பி சார்ல்ஸ் சந்தியாகு, பிகேஆர் உச்சமன்ற உறுப்பினர் டான் ஈ கியு முதலானவர்களும் சேர்ந்து கொண்டனர்.

அங்கிருந்தோரிடம் என்ஆர்டி அதிகாரிகள் குடியுரிமை விண்ணப்பப் பாரங்களை விநியோகம் செய்யவே, அதிகாரிகளுக்கும் சுரேந்திரனுக்குமிடையில் (வெள்ளைச் சட்டையில் இருப்பவர்) வாக்குவாதம் மூண்டது. நாடற்ற மக்கள் அவர்களுக்கு உரிய ஒன்றைப் பெற விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை என்றாரவர்.

ஆர்ப்பாட்டம் பற்றி விவரித்த பிகேஆர் விளம்பரப் பிரிவு இயக்குனர் நிக் நஸ்மி, இந்நாட்டு மக்களுக்குக் குடியுரிமை மறுக்கப்படக்கூடாது என்பதையும் அவர்களுக்கு இயல்பாகவே குடியுரிமை வழங்கப்பட வேண்டும் என்பதையும் கவனப்படுத்துவதே அதன் நோக்கம் என்றார்.

“முடிவான நோக்கம் இதுதான். மலேசியர்களுக்கு குடியுரிமை மறுக்கப்படக்கூடாது. குடிமக்களுக்கு அவர்களின் உரிமை கிடைக்காதிருக்கக்கூடாது”, என்றாரவர்.

TAGS: