கூட்டரசு, மாநிலத் தேர்தல்கள் தனித்தனியாக நடத்தப்படுவதை மகாதீர் விரும்புகிறார்

பக்காத்தான் வசமுள்ள மாநிலங்கள் பொதுத் தேர்தலுடன் மாநிலச் சட்டமன்றத் தேர்தல்களை நடத்த முன் வராவிட்டால் ஆளும் கூட்டணியான பிஎன்-னுக்கு அது நன்மையாக இருக்கும் என முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் கூறியிருக்கிறார்.

அந்தச் சூழ்நிலையில் பிஎன் தனது வளங்களை மாநிலத் தேர்தல்களுக்கும் மாற்றி விடாமல் பொதுத்  தேர்தலில் வெற்றி பெறுவது மீது அது முழுக் கவனம் செலுத்த முடியும் என மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் அவர் சொன்னார்.

“அத்துடன் தான் வெற்றி பெற்ற மாநிலங்களில் அதிகாரத்தைத் தக்க வைத்துக் கொள்வதும் எளிதில் சாத்தியமாகி விடும்,” என்றார் அவர்.

பொதுத் தேர்தல் எப்போது நிகழும் என்பதை தம்மால் உறுதியாகக் கூற முடியாது என்பதை அந்த முன்னாள் பிரதமர் ஒப்புக் கொண்டார். என்றாலும் ஆகஸ்ட் நோன்புப் பெருநாளுக்கு முன்னதாக நிகழாது எனத் தாம் எண்ணுவதாக அவர் சொன்னார்.

மலேசியத் தேர்தலில் அந்நியச் சக்திகள் ஆர்வம் காட்டுமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த மகாதீர் பிரதமர் பதவிக்கு நஜிப் அப்துல் ரசாக்கைக் காட்டிலும் அன்வார் இப்ராஹிமையே அமெரிக்கா விரும்பக் கூடும் என்றார்.

சில நாடுகளில் பொதுத் தேர்தல்களில் தலையிடுவதற்காக அரசு சாரா அமைப்புக்களுக்கு அமெரிக்கா நிதி அளிப்பதாகவும் மகாதீர் குற்றம் சாட்டினார்.

மலேசியாவில் நடப்பு ஆட்சி சீனாவையும் ஈரானையும் ஆதரிப்பதாலும் அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளில் மலேசியா இணைந்து கொள்ளாததாலும் இந்த நாட்டில் ஆட்சி மாற்றத்தைக் காண அமெரிக்கா விரும்புகிறது என்றார் அவர்.

 

TAGS: