நஜிப், போராளிகளுக்கு விடுக்கப்படும் மருட்டல்கள் மீது அரசாங்கம் ஏன் மிக அமைதியாக இருக்கிறது ?

மனித உரிமைப் போராளிகளுக்கு எதிராக விடுக்கப்படும் மருட்டல்கள் அதிகரித்து வருகின்றன. ஆனால் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அது குறித்து மௌனமாக இருக்கிறார். அரசாங்கமும் ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தேர்தல் சீர்திருத்த போராட்ட அமைப்பான பெர்சே 2.0 வினவியுள்ளது.

அரசியல் ஆய்வாளாரான ஒங் கியான் மிங் வீட்டில் நேற்று மேற்கொள்ளப்பட்ட தாக்குதலை அரசாங்கம் விசாரிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்ட அது அவ்வாறு செய்யப்படாவிட்டால் அரசாங்கம் அத்தகைய சம்பவங்களை ஆதரிப்பதாகக் கருதப்படக் கூடிய அபாயம் உள்ளதாக அது கூறியது.

அந்த தாக்குதல் அரசியல் நோக்கம் கொண்டது என்னும் சாத்தியத்தை “நிராகரிக்க முடியாது”. ஏனெனில் ஒங் கடந்த காலத்தில் வெளிப்படையாகவே அரசாங்கக் கொள்கைகளை குறை கூறி வந்துள்ளார்.

“அரசாங்கத்தைச் சாராதவர்கள் மனித உரிமைப் போராட்டவாதிகள் மீது நடத்தும் தாக்குதல்கள் அண்மைய காலமாக அதிகரித்து வருகின்றன. அதன் ஒரு பகுதியாகவே பெர்சே அந்தத் தாக்குதலைக் கருதுகிறது,” என அதன் இன்றைய அறிக்கை தெரிவித்தது.

“அவருக்கு தீங்கு ஏதும் ஏற்படாதது குறித்து நாங்கள் நிம்மதி அடைந்துள்ள போதிலும் ஜனநாயகப் பேச்சு சுதந்திரமுள்ளதாக கூறப்படும் இந்த நாட்டில் அத்தகைய சம்பங்கள் நிகழவே கூடாது.”

“மனித உரிமை போராளிகளுக்கு எதிரான தாக்குதல்களைச் சாதாரணமாக எடுத்துக் கொள்ளக் கூடாது.”

ஏப்ரல் 28ம் தேதி பெர்சே 3.0 பேரணியைத் தொடர்ந்து பெர்சே இணைத் தலைவர் அம்பிகா ஸ்ரீனிவாசன் மிரட்டப்பட்ட பல சம்பவங்களையும் பிடிபிடிஎன் எதிர்ப்பு மாணவர்கள் மீது ஏப்ரல் மாதம் நடத்தப்பட்ட தாக்குதலையும் அரசு சாரா அமைப்புக்களின் கூட்டணியான பெர்சே சுட்டிக் காட்டியது.

“இதுநாள் வரையில் வன்முறை கலாச்சாரத்தைப் பின்பற்றி வருகின்றவர்களுக்கு எதிராக போலீசார் எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்கவில்லை. பிரதமர் என்ற முறையில் நஜிப் ரசாக்கும் அத்தகைய  சம்பவங்கள் மீது மௌனமாக இருக்கிறார்.”

“அரசாங்கம் அந்தத் தாக்குதல்களைக் கண்டிக்க வேண்டும். அவற்றுக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லை என்றால் அத்தகைய தாக்குதல்களை அரசாங்கம் ஏற்றுக் கொள்வதாகக் கருதப்படக் கூடும்.”

பிகேஆர் உதவித் தலைவரும் மனித உரிமை வழக்குரைஞருமான என் சுரேந்திரனும் நேற்று மிரட்டலுக்கு இலக்கானார். மஇகா-வை அவர் குறை கூறுவது தொடர்பில் அவர் மீது அமிலத் தாக்குதலை நடத்தப் போவதாக மருட்டும் குறுஞ்செய்தி அவருக்கு நேற்று கிடைத்தது.

TAGS: