திருமணமாகாத முஸ்லிம் ஜோடிகள் சினிமா அரங்குகளில் தனித்தனியாக அமர்ந்து படம் பார்க்க வேண்டும் என கோலா சிலாங்கூர் மாவட்ட மன்றம் விதித்துள்ள புதிய விதிமுறை, பொது இடங்களில் அநாகரீகமாக நடந்து கொள்வதைத் தடுக்கும் நோக்கத்தைக் கொண்டுள்ளது. ஹுடுட் அல்லது இஸ்லாமியச் சட்டங்களை அமலாக்குவதற்கான தொடக்கம் அல்ல என சிலாங்கூர் பாஸ் இன்று விளக்கமளித்துள்ளது.
அந்த விவகாரம் மீது பாஸ் கட்சியின் நிலை குறித்து விளக்குவதற்காக இன்று சிலாங்கூர் மாநிலச் சட்டமன்றத்தில் மாநில பாஸ் ஆணையர் டாக்டர் அப்துல் ரானி ஒஸ்மான், துணை ஆணையர் காலித் சாமாட், கோலா சிலாங்கூர் எம்பி சுல்கெப்லி அகமட் ஆகியோர் நிருபர்களைச் சந்தித்தனர்.
“இது ஹுடுட் சட்டங்களின் தொடக்கம் அல்ல,” என மெரு சட்டமன்ற உறுப்பினருமான ரானி வலியுறுத்தினார்.
சிசுக்களை கைவிடுவது போன்ற சமூக சீர்கேடுகளை ஒழிப்பதற்கு பாஸ் கட்சி கொண்டுள்ள கடப்பாட்டுக்கு இணங்க அந்த விதிமுறை அமைவதாக அவர் விளக்கினார்.
“அந்தப் புதிய விதிமுறை ரத்துச் செய்யப்படவில்லை. தள்ளி வைக்கப்படுகின்றது,” என்றார் ரானி.
திரையரங்குகளில் சிலர் அநாகரீகமாக நடந்து கொள்வதாக சினிமா ரசிகர்கள் ஊராட்சி மன்றத்திடம் புகார் செய்த பின்னர் அந்த ‘நினைவூட்டல்’ அமல் செய்யப்பட்டதாக காலித் தெரிவித்தார்.
“திரையரங்குகள் பொது இடங்களாகும். அங்கு ஒருவர் நாகரீகமாகவும் மரியாதையாகவும் நடந்து கொள்ள வேண்டும். அவற்றை ஏழை மக்களுடைய இரவு நடன விடுதிகளாக மாற்ற வேண்டாம்.”
பொது நாகரீகம் என்பது முஸ்லிம்களுக்கு மட்டுமின்றி முஸ்லிம் அல்லாதாருக்கும் பொருந்தும் என அந்த ஷா அலாம் எம்பி கூறினார். ஆகவே ஊராட்சி மன்றத்தின் முழு வாரியக் கூட்டத்தில் அந்த விதிமுறை திருத்தப்படும் என்றார் அவர்.
லாட்டரி டிக்கெட்டுக்களை அல்லது மதுபானங்களை முஸ்லிம்கள் வங்குவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது என லாட்டரி அல்லது மதுபானக் கடைகளுக்கு முன்பு வைக்கப்பட்டுள்ள நினைவூட்டலைப் போன்றதே இது என சுல்கெப்லி சொன்னார்.
முழு வாரியக் கூட்டத்தில் அங்கீகரிக்கப்படுவதற்கு முன்னர் அது ஏன் அமலாக்கப்பட்டது என அவரிடம் வினவப்பட்டது. தங்களுக்கும் அந்த விஷயம் குழப்பமாக இருப்பதாக சுல்கெப்லி சொன்னார்.
நடைமுறைகளைப் பின்பற்றாத சில “ஆர்வமுள்ள” மாவட்ட மன்ற உறுப்பினர்களின் வேலையாக இருக்கலாம் என அவர் கருதுகிறார்.