மலேசிய எதிர்க்கட்சி தலைவர் அன்வார் இப்ராஹிம் மீது சுமத்தப் பட்ட ஓரின புணர்ச்சி வழக்கை 6 மாதங்களுக்குப் பிறகு மீண்டும் உயிர்பிக்க சட்டத்துறை முயலுவது முழுக்க அரசியலாகும் என்று கூறுகிறார் சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் சேவியர் ஜெயக்குமார்.
எதிர்க்கட்சிகளின் தேர்தல் பிரச்சாரப் பணிகளை முடக்கவும், நாடு முலுவதிலும் பக்காத்தான் தலைவர்களின் சுமூகப் பிரவேசங்களைத் தடுக்கவும், பாரிசான் அரசாங்கம் நீண்ட நாட்களாகப் போலீஸ், எம்.ஏ.சி.சி, இமிகிரேசன், சட்டத்துறைகளை பயன்படுத்தி வருகிறது. இந்த அரசியல் கைங்கரியங்களை மக்கள் நன்கு உணர்ந்துள்ளனர் என்பதைச் சுட்டிக் காட்டிய சேவியர், இதனால் எதிர்க்கட்சித் தலைவரின் மீது மக்களுக்கு அனுதாபமும், அபிமானமும் உயரவே செய்துள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“இசா சட்டம் அரசியல் ரீதியாக பாரிசானுக்கு உதவ வில்லை என்பதனை கண்டுப்பிடிக்க தேசிய முன்னணி அறிவாளிகளுக்கு 55 ஆண்டுகள் தேவை பட்டுள்ளது. காலம் கடந்த இது போன்ற கற்பனை வழக்குகளால் நாட்டு மக்களிடம் எதிர்க்கட்சி தலைவரின் நன்மதிப்பைக் குறைக்க முடியாது என்ற உண்மையை உணர, அவர்கள் நாட்டின் ஆட்சியையே இழந்தால் தான் எட்டும்.”
“நாம் நாட்டின் வளர்ச்சியை உலக மற்றும் ஆசியான் சுற்று வட்டார நாடுகளுடன் ஒப்பிடும்போது கல்வி, பொருளாதாரம், சமூகவியல் என்று பல துறைகளில் அது பின்தங்கி வருகிறது. பொருளாதாரத்தில், இவ்வட்டாரத்தில் ஒரு நோயாளி நாடாக மலேசிய உருவெடுத்து வருகிறது என்பதற்குச் சான்றாக, எதற்கெடுத்தாளும் மலேசியா திவாலாகி விடும் என்ற கருத்துகளை அடிக்கடி கூறிவரும் பாரிசான் அமைச்சர்களும், தலைவர்களும் கூறி வருவதை மக்கள் கவனமாக கவனிக்க வேண்டும், என்று அவர் மக்களைக் கேட்டுக்கொண்டார்.
பாரிசான் அதன் 55 ஆண்டுக்கால ஆட்சியில் செல்வம் கொழிக்கும் சுவர்ணபூமியை திவால் ஆகும் நிலைக்கு கொண்டு வந்துள்ளதின் ஒப்புதல் வாக்கு மூலம் என்பதனை மக்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
நாட்டின் மீது, மக்கள் மீது அக்கறை கொண்ட தலைமைத்துவமாக இன்றைய அரசாங்கம் இருந்தால், போட்டி மிக்க ஒரு சிக்கலான பொருளாதார காலக்கட்டத்தில் நாடு இருக்கும்போது நாட்டின் சிறந்த மூளைகளை, சிந்தனை வாதிகளின் கருத்துகளை, அவர்களின் உழைப்பைத் தேச வளப்பத்திற்குப் பயன்படுத்த வேண்டும். ஆனால் இன்று அவர்கள் தாங்கள் மாட்டிக்கொண்டுள்ள அனைத்துலக் வழக்குகளிலிருந்து விடுப்படவும், மற்றவர்கள் மீது வழக்குகளை ஜோடிப்பதிலும் மக்களின் வரிப்பணத்தையும், மக்களின் நேரத்தையும் வீணடிக்கின்றனர் என்றாரவர்.
இந்த இக்கட்டான காலக் கட்டத்திலிருந்து இந்நாடு விடுப்பட வேண்டும். இந்நாடு மீண்டும் முன்னேற்றப் பாதையில் பீடுநடை போட மக்கள் தீர்க்கமான முடிவினை விரைந்து எடுக்க வேண்டும். இந்நாட்டை ஆரோக்கியமற்ற தலைமைத்துவத்திடமிருந்து விரைந்து மீட்க வேண்டும். அவர்களை சிகிச்சைக்கு அனுப்ப வேண்டும். அதனை நாம் செய்யத் தவறினால் நாடு மிகுந்த பொருளாதார, கல்வி, இன, மொழி, சமய, கலாச்சார விவகாரங்களில் சிக்கிச் சீரழிவதை நம்மால் தடுக்க முடியாமல் போய் விடும் என்பதை சேவியர் வலியுறுத்தினார்.
“மக்கள் அனைவரும் ஒன்றுபட்டு இந்நாட்டை காப்பாற்ற வேண்டிய மிக முக்கயமான நேரம் இது; நாட்டுக்காக மக்கள் தியாகம் செய்ய வேண்டிய நேரம் இது”, என்று அவர் மேலும் கூறினார்.