மசீச இளைஞர் பிரிவு: மகாதீர் இளைஞர்களிடமிருந்து விலகிச் சென்று விட்டார்

துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி சான்றிதழ்களை அரசாங்கம் அங்கீகரித்துள்ளது குறித்து முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட் தெரிவித்துள்ள கருத்துக்கள், அவர் இளைய தலைமுறையினரிடமிருந்து விலகிச் சென்று விட்டதைக் காட்டுவதாக மசீச இளைஞர் பிரிவு கூறுகிறது.

அந்தக் கல்லூரியின் டிப்ளோமாக்கள் அவற்றின் தரத்துக்காக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. மகாதீர் சொல்வது போல வாக்குகளைக் கவருவதற்காக அல்ல என மசீச இளைஞர் பிரிவின் கல்விப் பிரிவுத் தலைவர் சொங் சின் வூன் கூறினார்.

“வாக்குகளை பிடிப்பதற்காக அரசாங்கம் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரி சான்றிதழ்களை அங்கீகரித்தது என மகாதீர் கூறிக் கொள்வது தேவையற்ற கருத்தாகும். அந்தக் கருத்து துல்லிதமாக இருக்க முடியாது. ஏனெனில் அந்தக் கல்லூரியின் தரம் மிகவும் உயர்வானது,” என அவர் விடுத்த அறிக்கை தெரிவித்தது.

“ஒய்வு பெற்ற பின்னர் மகாதீர் விடுக்கும் அறிக்கைகள் அவர் இளைய தலைமுறையினரிடமிருந்து விலகிச் சென்று விட்டதைக் காட்டுகிறது,” என்றார் சொங்.

அந்தக் கல்லூரியின் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படுவதாக கடந்த மாதம் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் அறிவித்தார். அதனை நான்கு நாட்களுக்கு முன்னர் மகாதீர் கடுமையாக குறை கூறினார்.

மலாய்க்காரர்கள் சிதறியிருப்பதாகவும் அத்தகைய அரசாங்க முடிவுகள் எடுக்கப்படாமல் இருப்பதற்கு மலாய்க்காரர்கள் தங்கள் பெரும்பான்மையைப் பயன்படுத்தியிருக்க வேண்டும் என மகாதீர் கூறியது பற்றி சொங் எந்தக் கருத்தும் தெரிவிக்கவில்லை.

மலாய்க்காரர்களின் ‘முட்டாள்களாக’ இருப்பதாக வருத்தமுடன் கூறிக் கொண்ட மகாதீர், மலாய்க்காரர்கள் ‘மூன்றுக்கு மேற்பட்ட பிரிவுகளாக’ சிதறியிருப்பதால் வாக்குகளுக்காக அரசாங்கம் மற்ற இனங்களிடம் வேண்டுகோள் விடுக்க வேண்டியுள்ளது எனக் கூறினார்.

“இதற்கு எல்லாம் வாக்குகளே காரணம். மலாய்க்காரர்களின் முட்டாள்தனத்தினால் இது எல்லாம் நிகழ்கிறது.”

“சுதந்திரம் பெற்ற போது மலாய்க்காரர்கள் தொடர்ந்து அதிகாரத்தில் இருப்பதற்காக அந்த மலாய்ச் சமூகம் பெரும்பான்மையாக இருப்பதாக நாம் ஒப்புக் கொண்டோம்.”

“ஆனால் மலாய்க்காரர்கள் இப்போது அதற்கு நேர்மாறாகச் செய்து கொண்டிருக்கின்றனர். மூன்றுக்கும் மேற்பட்ட பிரிவுகளாக பிரிந்து தங்கள் சொந்தப் பெரும்பான்மையையே சீரழித்துக் கொண்டிருக்கின்றனர்,” என கடந்த ஞாயிற்றுக் கிழமை மிங்குவான் மலேசியாவுக்கு அளித்த பேட்டியில் அந்த முன்னாள் பிரதமர் சொன்னார்.

அத்தகைய சூழ்நிலையில் அவர்களுக்கு மற்ற இனங்களுடைய வாக்குகள் தேவைப்படுகின்றது,” என்றார் அவர்.

ஜுன் 27ம் தேதி மிகவும் கோலாகலமான முறையில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் துங்கு அப்துல் ரஹ்மான் கல்லூரிச் சான்றிதழ்கள் அங்கீகரிக்கப்படும் என அறிவித்தார். அதற்கு மகாதீர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது நஜிப்புக்கு கொடுக்கப்பட்ட இன்னொரு அடி எனக் கருதப்படுகின்றது.

1969ம் ஆண்டு அந்தக் கல்லூரியைத் தொடங்கிய மசீச-வுக்கு அந்த அங்கீகாரம் பெரிய சாதனையாகக் கருதப்படுகின்றது.

அண்மையில் அந்தக் கல்லூரிக்கு வருகை அளித்த நஜிப் அது வழங்கும் 70க்கும் மேற்பட்ட பயிற்சிகளுக்கு பின் தேதியிடப்பட்டு அங்கீகாரம் வழங்கப்படும் என அறிவித்தார்.

TAGS: