பிகேஆர்: நஜிப் ‘போலி ஜனநாயகவாதி’ என்பதை ஒற்றுமை மசோதா நிரூபிக்கும்

1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்கு பதில் தேசிய ஒற்றுமைச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என யோசனை தெரிவித்ததற்காக பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கை ‘போலி ஜனநாயகவாதி’ என பிகேஆர் சாடியுள்ளது.

அந்தப் புதிய மசோதா, ‘காலத்திற்கு ஒவ்வாத அரைகுறையான உருமாற்றத்தை’ மீண்டும் ஒரு முறை மக்களுக்கு நஜிப் நிர்வாகம் வழங்குவதை காட்டுவதாக  பிகேஆர் உதவித் தலைவர் நுருல் இஸ்ஸா அன்வார் இன்று விடுத்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

“சாதாரணமாகப் பார்த்தால் தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்படுவது ஆக்கப்பூர்வமான மாற்றமாகத் தெரியும்.”

“ஆனால் நஜிப் நிர்வாகத்தின் கடந்த கால நடவடிக்கைகளை வைத்துப் பார்க்கும் போது அவருடைய  ‘உருமாற்ற’ நடவடிக்கைகள் அரசியல் பொய்கள் மட்டுமல்ல, மக்களுடைய விருப்பங்களைப் பூர்த்தி செய்கின்ற வெளிப்படையான விரிவான அரசியல் சீர்திருத்தங்களை வழங்குவதற்கான அரசியல் உறுதிப்பாடு அவருக்கு இல்லை என்பதையும் நிரூபிக்கின்றன,” என அந்த லெம்பாய் பந்தாய் எம்பி சொன்னார்.

“நஜிப் நிர்வாகத்தின் கடந்த கால நடவடிக்கைகள் அவர் போலியான ஜனநாயகவாதி என்பதையும் காட்டுகிறது,”என அவர் மேலும் கூறினார். கடந்த மாதம் கனடிய நாளேடு ஒன்று நஜிப்புக்கு போலி ஜனநாயகவாதி எனக் குறிப்பிட்டு செய்தி வெளியிட்டிருந்தது.

சர்ச்சைக்குரிய பிரபலமான அரசியல் தலைவர்கள் பற்றி The Globe and Mail என்ற நாளேட்டில் ஜுன் 8ம் தேதி வெளியான கட்டுரையில் பல விருதுகளைப் பெற்றுள்ள மார்க் மெக்கினோன் என்ற பத்திரிக்கையாளர் அந்தச் சொல்லைப் பயன்படுத்தியிருந்தார்.

TAGS: