வரிப்பணத்தில் பெரும்பகுதியை வழங்கும் சிலாங்கூர், கூடுதல் கூட்டரசு ஒதுக்கீட்டைப் பெறும் முயற்சிகளை முடுக்கிவிடும்.
“கூடுதலாகக் கொடுக்கும் மாநிலங்கள் கூடுதலாக பெறவும் வேண்டும்”, என்று மந்திரி புசார் காலிட் இப்ராகிம் இன்று கேள்வி நேரத்தின்போது சட்டமன்றத்தில் கூறினார்.
சிலாங்கூர், மத்திய அரசுக்கு கிட்டதட்ட ரிம10பில்லியனை வருமான வரியாக வழங்குகிறது ஆனால் கூட்டரசு ஒதுக்கீடாக அதற்கு இவ்வாண்டில் கிடைத்தது ரிம567மில்லியன்தான் என்றாரவர்.
ரிம10மில்லியன் என்பது ஒரு மதிப்பீடுதான். வருமான வரி வாரியம் வரிப்பணம் பற்றித் தகவல் அளிக்க மறுத்துவிட்டது என்று கூறிய காலிட்(நிற்பவர்) சிலாங்கூர் மக்களின் வருமானத்தின் அடிப்படையில் அந்த மதிப்பீடு செய்யப்பட்டது என்றார்.
கூடுதல் வரிப்பணம் வழங்கும் மாநிலங்கள் மத்திய அரசிடமிருந்து கூடுதல் நிதியைப் பெறவும் வேண்டும் என்றவர் கருதுகிறார்.மத்திய அரசு, வரிப்பணத்தின் ஒரு பகுதியைக் கொண்டு கல்விக்கும் மற்ற துறைகளுக்கும் செலவு செய்ய வேண்டிய தேவையும், குறைந்த வருமானத்தைக் கொண்ட மாநிலங்களுக்கு உதவ வேண்டிய தேவையும் இருப்பதை அவர் அறிந்தே இருக்கிறார்.
தற்போது கூட்டரசு கருவூலம் விருப்பப்படி நிதி ஒதுக்கீடுகளைச் செய்கிறது என்றும் அதற்குப் பதிலாக ஒரு மன்றம் அமைக்கப்பட்டு அதில் கூட்டரசு அரசும் மாநில அரசுகளும் அமர்ந்து வருமானத்தைச் சிறந்த முறையில் பகிர்ந்தளிப்பது பற்றி விவாதித்து முடிவு காணலாம் என்றும் அவர் கருத்துரைத்தார்.
மாற்றரசுக் கட்சியின் கட்டுப்பாட்டில் உள்ள மாநிலங்களில், குறிப்பாக நீண்டகாலமாக மாற்றரசுக் கட்சியின் ஆட்சியில் இருந்துவரும் கிளந்தானில், கூட்டரசு நிதி ஒதுக்கீடுகள் குறித்து மிகுந்த அதிருப்தி நிலவுகிறது.அதன் காரணமாகவே அங்கு மேம்பாடு மெதுநடை போடுவதாகவும் தெரிகிறது.
அதற்குக் கொடுக்க வேண்டியதைக் கூட்டரசு அரசாங்கம் கொடுப்பதில்லை அல்லது கூட்டரசு அரசாங்கம்தான் மக்களுக்கு உதவுகிறது என்ற தோற்றத்தை ஏற்படுத்த அங்கு செயல்படும் கூட்டரசு அமைப்புகளிடம் பணத்தை வழங்கி விடுகிறது என்ற கருத்து நிலவுகிறது.
புத்தாக பக்காத்தான் ஆட்சிக்கு வந்துள்ள சிலாங்கூர், பினாங்கு ஆகியவற்றிலும் இதேபோன்ற குற்றச்சாட்டுகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.