ராபிஸியின் எல்ஆர்டி ஆதாரங்களின் உண்மை நிலை குறித்து கேள்வி எழுப்பப்பட்டுள்ளது

எல்ஆர்டி சேவைகளை நடத்தி வரும் Syarikat Prasarana Negara Berhad, ஒரு பில்லியன் ரிங்கிட் பெறும் அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டக் குத்தகை ஜார்ஜ் கெண்ட் பெர்ஹாட் தலைமையிலான கூட்டு நிறுவனம் ஒன்றுக்கு கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதை மறுத்துள்ளது.

Syarikat Prasarana Negara Berhad அரசாங்கத்துடன் தொடர்புடைய நிறுவனம் ஆகும்.

அந்தத் திட்டத்தை பிரதமரும் நிதி அமைச்சருமான நஜிப் அப்துல் ரசாக் ஜார்ஜ் கெண்ட்-டுக்கு வழங்கியுள்ளதைக் காட்டுவதாக பிகேஆர் வியூக இயக்குநர் வெளியிட்டுள்ள ஆவணங்கள் உண்மையானது தானா என்று Prasarana குழுமத்தின் நிர்வாக இயக்குநர் ஷாஹ்ரில் மொக்தார் கேள்வி எழுப்பினார்.

அவரது செய்தி இன்று பைனான்ஷுஅய்ல் டெய்லி என்ற ஏட்டில் வெளியாகியுள்ளது.

“கேள்விக்குரிய அந்த ஆவணங்கள் உண்மையில்லாததாகவும் இருக்கலாம்,” என்றார் அவர்.

அம்பாங் எல்ஆர்டி விரிவுத் திட்டம் வழங்கப்படுவதில் நஜிப் தலையிட்டதாக தாம் கூறிக் கொள்வதை நிரூபிப்பதற்கு கடந்த செவ்வாய்க்கிழமை ராபிஸி சில ஆவணங்களை காட்டினார்.

நஜிப் தலைமை தாங்கிய நிதி அமைச்சின் கொள்முதல் குழுவின் ஐந்தாவது கூட்டக் குறிப்புக்கள், Syarikat Prasarana Negara Berhadக்கு குழுவின் முடிவை அறிவிக்கும் ஜுன் 25ம் தேதியிடப்பட்ட கடிதம் ஆகியவை அந்த ஆவணங்களில் அடங்கும்.

“ஜுன் 21ம் தேதி கூடிய நிதி அமைச்சின் கொள்முதல் குழு 1,180,037,624 ரிங்கிட் பெறும் அம்பாங் பாதைக்கான விரிவுத் திட்டத்தை 44 மாதங்களுக்குள் முடிப்பதற்கு ஜார்ஜ் கெண்ட்-டை நியமிப்பதற்கு ஜுன் 21ம் தேதி கூட்டத்தில் ஒப்புக் கொண்டதாக ஷாஹ்ரிலுக்கு அனுப்பப்பட்ட அந்தக் கடிதம் கூறியது.” அந்தக் கடிதத்தை ராபிஸி நிருபர்களுக்கு வாசித்தார்.

ஆனால் ஜார்ஜ் கெண்ட்-க்கு குத்தகை வழங்கப்பட்டதற்கான கடிதம் கொடுக்கப்படவில்லை என்று ஷாஹ்ரில் நிருபர்களிடம் கூறினார்.

அந்தத் திட்டத்துக்கான குத்தகையாளர் தேர்வில் நிதி அமைச்சு எடுக்கும் எந்த முடிவுக்கும் Prasarana கட்டுப்படும் என அதன் தலைவர் இஸ்மாயில் அடாம் கூறியதாக பைனான்ஷியல் டெய்லி குறிப்பிட்டது.

“Prasarana-வைப் பொறுத்த வரையில் சில திட்டங்கள் முடிவு எடுக்கும் உரிமை எங்களுக்கு அப்பாற்பட்டவை. இந்த விஷயத்தில் அந்தத் திட்டத்தின் மதிப்பு ஒரு பில்லியன் ரிங்கிட் ஆகும். அதனால் அது நிதி அமைச்சுக்குச் செல்கிறது. எங்கள் தரப்பில் அரசாங்கம் யாரை முடிவு செய்தாலும் நாங்கள் அவர்களுடன் வேலை செய்வோம்,” என்றார் அவர்.

அந்த விவகாரம் மீது நஜிப் இன்னும் எந்தப் பதிலும் அளிக்கவில்லை.

 

TAGS: