லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்றத்திலிருந்து ராஜினாமா

லத்தீப்பா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற  (MBPJ) உறுப்பினர் பதவியிலிருந்து ராஜினாமா செய்திருக்கிறார்.

அவரை அந்தப் பொறுப்பிலிருந்து நீக்குவதற்கு மாநில ஆட்சிமன்றம் திட்டமிடுவதாக வதந்திகள் பரவி வரும் வேலையில் அவர் அந்தப் பதவியைத் துறந்துள்ளார்.

அந்த ஊகங்கள் பொது மக்களிடையே பரவத் தொடங்கி விட்டதால் தமது பதவியில் தொடர்ந்து நீடிப்பது “பொருத்தமாக இருக்காது” எனக் கருதுவதாக சிலாங்கூர் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் லத்தீபா குறிப்பிட்டுள்ளார்.

வீடமைப்பு விவகாரங்கள் மீது அவர் மாநில நிர்வாகத்தை குறை கூறியுள்ளதைத் தொடர்ந்து அவரை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற  (MBPJ) உறுப்பினர் பதவியிலிருந்து நீக்குவது பற்றி மாநில ஆட்சி மன்றம் சிந்திப்பதாக  கூறப்பட்டுள்ளது.

“ஏழ்மையில் உள்ளவர்களுக்கான வீடமைப்புத் திட்டங்கள் குறித்த என்னுடைய கவலையை நான் உள் மின் அஞ்சல் வழியாக உங்களுக்கும் (காலித்) கட்சியின் மற்ற மூத்த தலைவர்களுக்கும் தெரிவித்திருந்தேன். அந்தக் கடிதத்திற்கும் MBPJ விவகாரங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை,” என லத்தீப்பா அந்தக் கடிதத்தில் எழுதியுள்ளார்.

“அந்தக் கடிதத்தின் விளைவாக நீங்களும் ஆட்சி மன்றமும் MBPJ மாநகராட்சி மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்குவது பற்றி சிந்திப்பதாக எனக்குத் தெரிய வந்துள்ளது,” என அந்தக் கடிதம் மேலும் கூறியது.

அந்த விஷயம் இப்போது “பொது மக்களுக்குத் தெரிந்து விட்டதாலும் ஊகங்கள் வெளியிடப்படுவதாலும் “தாம் விலகிக் கொள்வதைத் தவிர வேறு வழியில்லை என்றும் லத்தீப்பா சொன்னார்.

லத்தீப்பாவை நீக்குவதற்கான யோசனையை காலித்-தே முன்மொழிந்ததாக கடந்த பிரி மலேசியா டுடே என்ற செய்தி இணையத் தளாம் கூறியது.

TAGS: