இல்லத்தரசிகளுக்கு ஆண்டுக்கு ரிம600 பக்காத்தான் வழங்கும்

பக்காத்தான் ரக்யாட்டில் உள்ள கட்சிகளின் மகளிர் பகுதிகள் மகளிருக்கான ‘புக்கு ஜிங்கா’ ஒன்றை வெளியிட்டுள்ளன.அதில், பக்காத்தான் ரக்யாட் ஆட்சிக்கு வந்தால் மகளிர் மேம்பாட்டுக்காகக் கொண்டுவரப்படும் திட்டங்கள் விவரிக்கப்பட்டுள்ளன.

மலேசிய மகளிர் திட்டம் (Agenda Wanita Malaysia ,AWM) என்று அழைக்கப்படும் அதைச் செயல்படுத்த ரிம5பில்லியன் செலவாகும் என்று மதிப்பிடப்படுகிறது.

இதன்கீழ் தேசிய மகளிர் பங்களிப்பு என்று ஒரு திட்டம் கொண்டுவந்து ஒவ்வொரு இல்லத்தரசிக்கும் மாதம் ரிம50கொடுக்க அது உறுதி கூறுகிறது.மேலும்,மனைவிமார்களின் சேமிப்புக்காக கணவன்மார் ரிம10-இலிருந்து ரிம100வரை கொடுக்குமாறும் கட்டாயப்படுத்தப்படுவர்.

“சமுதாயத்தில் மகளிர் பங்கை அங்கீகரிக்கும் வகையில் பக்காத்தான் ரக்யாட் தேசிய மகளிர் பங்களிப்புத் திட்டத்தை அறிமுகப்படுத்துகிறது.

“இது ஒருமுறை மட்டும் அளிக்கப்படும் உதவி அல்ல, தொடர்ந்து வழங்கப்படும் ஆக்கப்பூர்வமான உதவி”, என்று டிஏபி மகளிர் தலைவர் சொங் எங்(வலம்) தெரிவித்தார்.

இதனையொட்டி மகளிருக்கு உதவும் மையங்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகளும் மற்ற வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்றாரவர்.

 

 

TAGS: