லத்தீபா ராஜினாமா மீது சிலாங்கூர் பிகேஆர், மாநில அரசைச் சாடுகிறது

சிலாங்கூர் மாநில அரசாங்கம் தனக்கு எதிராக கூறப்படும் குறைபாடுகளைத் திறந்த மனத்துடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என அந்த மாநில பிகேஆர் வலியுறுத்தியுள்ளது.

அவ்வாறு குறைகள் தெரிவிக்கப்பட்டது லத்தீபா கோயா பெட்டாலிங் ஜெயா மாநகாரட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து விலகிக் கொள்வதற்கு வழி வகுத்து விட்டதாகக் கூறப்பட்டதைத் தொடர்ந்து மாநில பிகேஆர் அறிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

கட்சித் தலைமைத்துவத்துடன் ஆலோசனை நடத்தாமல் அந்த மாநகராட்சி மன்ற உறுப்பினரை விலக்குவது பற்றி மாநில அரசாங்கம் சிந்தித்துள்ளது குறித்து சிலாங்கூர் பிகேஆர் துணைத் தலைவர் சுராய்டா கமாருதின் ஆழ்ந்த வருத்தம் தெரிவித்தார்.

“சிலாங்கூர் அரசாங்கம் குறைபாடுகளை திறந்து மனதுடன் ஏற்றுக் கொள்ள வேண்டும் என நாங்கள் அறிவுரை கூற விரும்புகிறோம். இந்த விஷயம் ரகசியமாக இருந்திருக்க வேண்டும்.”

“அந்த விவகாரம் மீது மாநில கட்சித் தலைமைத்துவத்துடன் ஆலோசனை ஏதும் செய்யாமல் மாநில அரசாங்கம் சொந்தமாக முடிவு செய்துள்ளது எங்களுக்கு வருத்தத்தை அளித்துள்ளது.”

லத்தீபாவின் முடிவு குறித்து சிலாங்கூர் பிகேஆர் ஆழ்ந்த வருத்தம் அடைந்துள்ளதாகவும் அவர் தமது முடிவை மறு ஆய்வு செய்வார் என நம்புவதாகவும் அவர் மேலும் கூறினார்.

“கட்சியிலும் ஊராட்சி மன்றத்திலும் புதிய அரசியல் பண்பாட்டை தோற்றுவிப்பதில் முக்கிய உந்து சக்தியாக அவர் திகழ்ந்தார்,” என்றும் சுராய்டா குறிப்பிட்டார்.

ஏழைகளுக்கான வீடமைப்புத் திட்டங்கள் தொடர்பில் மந்திரி புசார் அப்துல் காலித் இப்ராஹிமிடமும் மற்ற கட்சித் தலைவர்களிடமும் தனிப்பட்ட முறையில் லத்தீபா கவலை தெரிவித்ததைத் தொடர்ந்து அவரை பெட்டாலிங் ஜெயா மாநகராட்சி மன்ற உறுப்பினர் பதவியிலிருந்து மாநில அரசாங்கம் நீக்கும் என பரவலாகப் பேசப்பட்டதைத் தொடர்ந்து லத்தீபா நேற்று தமது பதவித் துறப்புக் கடிதத்தை சமர்பித்தார்.

 

TAGS: