பந்திங் கம்போங் பத்திமா நில விவகாரத்தில் ஏன் வீண் பிரச்சனை?

கடந்த ஜூன்  14 ஆம் தேதி  கோலலங்காட் மாவட்ட அதிகாரியுடன்  நடத்தப்பட்ட சந்திப்பில்  கம்போங் பத்திமாவை சார்ந்த 22 குடும்பங்களுக்கு  வீட்டு மனை வழங்க ஒப்பு கொள்ளப் பட்டது. அதற்கான மேல்நடவடிக்கைக்கு  ஆவன செய்ய மாவட்ட நில அதிகாரி கேட்டுக்கொள்ளப்பட்டதை அன்றைய கூட்டத்தில் கலந்து கொண்ட  அக்கம்பத்து பிரதிநிதிகள் உட்பட, கிராமத் தலைவர்கள் மற்றும் மாவட்டமன்ற உறுப்பினர்கள் அனைவரும் நன்கு அறிவர் என்று சிலாங்கூர் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார் கூறுகிறார்.

ஆனால் மாவட்ட நில  இலாகா, கடந்த மார்ச் மாதம் 13 ஆம் தேதி எடுத்த முடிவு குறித்து அனுப்பிய  கடித்ததின் மீது, அதாவது காலாவதியான ஒரு கடித்ததின் மீது, ஆர்ப்பாட்டம் செய்வதும், மக்களைத் தூண்டி விடுவதும் அவசியமற்றது என்றாரவர்.

“எனது அலுவலகத்தில் நடந்த கூட்டத்ததில் கலந்து கொண்டு சென்ற இரண்டு  நாள்களில் காலவதியான ஒரு கடித்தை வைத்துக் கொண்டு மக்களைத் திசை திருப்ப என்னக் கூடாது.

“அப்படி ஒரு கடிதம் வந்திருந்தாலும், அது குறித்து என்னுடன் தொடர்பு கொண்டு  விசயத்தைக் கூறியிருக்க வேண்டும். ஆனால்,  பல ஆண்டுகளாக  ஒன்றுமே நடக்காத ஒரு திட்டத்தின் மீது, இன்றைய அரசு கடந்த 2011ம் ஆண்டு நடவடிக்கையைத் தொடங்கி ஒரு பகுதி மக்களுக்கு நிரந்தரப் பட்டாவும், ஆற்றை ஒட்டி இருப்பவர்களுக்குத்  தற்காலிக பட்டாவும் கொடுக்க  உத்தேசித்துள்ள வேளையில் அதனைக் கெடுக்கச் சிலர்  வேலை செய்வது வெட்கப்பட வேண்டிய விவகாரம்”, என்று சேவியர் வருத்தம் தெரிவித்தார். 

அன்றைய கூட்டத்தின் முடிவுப்படி  ஆற்றின் கரையிலிருந்து  50 மீட்டருக்கு அப்பாலுள்ள வீடுகளுக்கு நிரந்தர நிலப் பட்டா வழங்க ஆட்சி குழுவின் ஒப்புதலைப் பெற ஆவனச் செய்ய கோலாலங்காட் நில அலுவலகம்  கேட்டுக்கொள்ளப்பட்டது. எஞ்சிய  வீடுகளுக்குத் தற்காலிக  குடியிருப்புக்கான அங்கீகாரம் வழங்கவும்  உத்தேசிக்கப்பட்டது.

அங்கு குடியிருப்பவர்களில்  லோட்  1லிருந்து லோட் 20 வரையிலும், லோட் எண் 32 மற்றும் 36 ஆகிய 22 குடியிருப்பாளர்கள்  நிரந்தரப் பட்டாவுக்குத் தகுதி பெற்றவர்கள் என்பதனை அறிந்திருந்தும், மாநில  அரசு  எல்லாரின் விண்ணப்பத்தையும் நிராகரித்து விட்டதாகக் குடியிருப்புவாசிகளிடம் கூறி வருவது வருத்தப்பட வேண்டிய விசயம் என்றார் சேவியர்.

“இதுவரை மாநில அரசு பொதுமக்களுக்குப் பயனான விவகாரங்களை எவர் எங்கள் அலுவலகத்திற்கு எடுத்து வந்தாலும், எந்தப் பாகுபாடும் வேற்றுமையும் காட்டாமல்  கவனித்து வருவதைக் கம்பம் பத்திமா  குடியிருப்பாளர்கள் நன்கு அறிவர்.  இந்த நடைமுறையைத்  தொடர்ந்து பின்பற்ற மாநில அரசு ஆர்வங்கொண்டுள்ளது. அதற்கு  எல்லோரும்  தொடர்ந்து  அதரவு தரவேண்டும்”, என்று அவர் கேட்டுக்கொண்டார்.

“நீண்ட காலமாக  ஆட்சியிலிருந்தபோது எதுவும் செய்யாதவர்கள் காரியம் கைகூடி வரும் வேளையில் வீண் குழப்படிகள் செய்யக் கூடாது.

“நம்மவர்கள் பயனடைவதைத் தடுக்க  முயற்சிப்பவர்களுக்கு  நாமே துணை போக வேண்டாம் என்று அன்புடன்கேட்டுக் கொள்கிறோன்”, என்றார் கிள்ளான் ஸ்ரீஅண்டாலாஸ் சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மாநில ஆட்சி குழு உறுப்பினர் டாக்டர் சேவியர் ஜெயக்குமார்.

 

 

TAGS: