பிரதமர் நஜிப் அப்துல் ரசாக் கொடூரமான சட்டங்களை அகற்றுவதற்கு உண்மையிலேயே விரும்பினால் அவர் 1948ம் ஆண்டுக்கான தேச நிந்தனைச் சட்டத்துக்குப் பதில் அது போன்ற ஒரு சட்டத்தைக் கொண்டு வரக் கூடாது என எதிர்த்தரப்புத் தலைவர் அன்வார் இப்ராஹிம் கூறுகிறார்.
“அந்த கொடூரமான சட்டங்களை நீங்கள் ஆதரிக்கின்றீகளா இல்லையா என்பதுதான் பிரச்னை. நீங்கள் அதற்கு இல்லை என பதில் சொன்னால் அதற்குப் பதிலாக புதிய சட்டத்தை அல்லது திருத்தங்களைக் கொண்டு வரக்கூடாது,” என அவர் ஜாலான் டூத்தா நீதிமன்ற வளாகத்தில் நிருபர்களிடம் கூறினார்.
காலனித்துவ ஆட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட தேச நிந்தனைச் சட்டம் ரத்துச் செய்யப்பட்டு அதற்குப் பதில் தேசிய நல்லிணக்கச் சட்டம் அறிமுகம் செய்யப்படும் என கடந்த வாரம் பிரதமர் அறிவித்தார்.
புதிய சட்டம் அரசாங்கத்திற்கு எதிராகக் குறை கூறுவதற்கு கூடுதலாக இடம் அளிக்கும் என்றும் அவர் சொன்னார்.
என்றாலும் அந்த புதிய மாற்றுச் சட்டத்தை, ஆளும் கூட்டணியில் ஆதிக்கம் செலுத்தும் அம்னோ அதனைத் தொடர்ந்து தவறாகப் பயன்படுத்தும் என்றார்.
“நிச்சயமாக அது தேர்வு செய்யப்பட்ட அடிப்படையில் பயன்படுத்தப்படும். அம்னோவும் அதன் வேலைகள் ஒப்படைக்கப்பட்டுள்ள அமைப்புக்களும் இன அல்லது சமய உணர்வுகளை தொட்டுப் பேசினால் அவற்றின் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட மாட்டாது. ஆனால் மற்றவர்கள் செய்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும்.”
அமைதியாக ஒன்று கூடும் சட்டத்தைப் போன்று தான் அதுவும் இருக்கும்- பெயர் வேண்டுமானால் மாறியிருக்கும். ஆனால் தாக்கம் ஒரே மாதிரியாகத் தான் இருக்கும்,” என்றார் அன்வார்.
மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்கள் தவறாகப் பயன்படுத்தப்படுகின்றன
மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கு ‘Janji Ditetapati’ என்னும் சுலோகத்தை பிஎன் பின்பற்றுவதையும் அன்வார் சாடினார். பிஎன் சுதந்திர தினக் கொண்டாட்டங்களை அரசியல் நோக்கங்களுக்குப் பயன்படுத்துவதாக அவர் சொன்னார்.
ஒடுக்குவதை நோக்கமாகக் கொண்ட சட்டங்களுக்குப் பதில் அதே போன்ற சட்டங்களை நஜிப் தொடர்ந்து அறிமுகம் செய்து வருவதாக நிருபர்கள் சந்திப்பின் போது உடனிருந்த பிகேஆர் உதவித் தலைவர் என் சுரேந்திரன் கூறினார்.
இதர பல சட்டங்களுடன் போலீஸ் சட்டத்தின் 27வது பிரிவுக்குப் பதில் அமைதியாக ஒன்று கூடும் சட்டமும் இசா சட்டத்துக்குப் பதில் பாதுகாப்புக் குற்றங்கள் (சிறப்பு நடவடிக்கைகள்) சட்டமும் அறிமுகம் செய்யப்பட்டதை அவர் சுட்டிக் காட்டினார்
“தேசிய நல்லிணக்கச் சட்டத்திலும் அதே போன்று நீங்கள் நிறைய எதிர்பார்க்கலாம். அதன் விவரங்களை ஆய்வு செய்தால் அது பழைய தேச நிந்தனைச் சட்டத்தைப் போன்று இருப்பதைக் காணலாம். சுதந்திரமாக பேசியதற்காக மக்கள் மீது குற்றம் சாட்டுவதற்கு அரசாங்கத்துக்கு அதிகாரம் தொடர்ந்து இருக்கும்,” என்றார் சுரேந்திரன்.