கோத்தா ராஜாவில் போட்டியிட்டால் உதயகுமார் வைப்புத்தொகை இழப்பார்

இண்ட்ராப், கோத்தா ராஜா நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிட முடிவு செய்யுமானால்  அங்கு மும்முனைப் போட்டி உருவாகி, பக்காத்தான் ரக்யாட்டுக்குச் சாதகமற்ற நிலை உருவாகும். ஆனால், இண்ட்ராப் அதன் வைப்புத்தொகையையே இழக்கும் என்கிறார் அத்தொகுதியின் நடப்பு எம்பி டாக்டர் சித்தி மரியா மஹ்மூட்.

இந்தியர்-அல்லாதவர்கள் இண்ட்ராபுக்கு வாக்களிக்க மாட்டார்கள் என்று கூறிய அவர் இந்திய மலேசியர்களும் அதை அறிவர் என்றார்.

“இண்ட்ராப் வெற்றிபெற வாய்ப்பே இல்லை. இந்தியர்கள் அனைவரும் வாக்களித்தால்கூட இண்ட்ராப் வெற்றி பெறாது. ஏனென்றால், மலாய்க்காரர்கள் இண்ட்ராபுக்கு வாக்களிக்க மாட்டார்கள். இண்ட்ராப் அனைத்து மக்களுக்காகவும் பாடுபடுவதாக அவர்கள் நினைக்கவில்லை”.

அப்படியொரு நிலை உருவானால் பிஎன்தான் வெல்லும். பிஎன் வெற்றி பெற்றால் ‘பழைய குருடி கதவைத் திறடி’ நிலைதான் என்று குறிப்பிட்ட மரியா இண்ட்ராப் எதற்காகப் போராடுகிறதோ அதற்காக பக்காத்தானும் போராடும் என்றார். ஆனால், அதன் போராட்டம் இன அடிப்படையில் அமைந்திராது.

கோத்தா ராஜாவில் அதன் தலைவர் பி.உதயகுமாரைக் களமிறக்க இண்ட்ராப் திட்டமிடுவது பற்றிக் கருத்துக் கேட்கப்பட்டதற்கு சித்தி மரியா இவ்வாறு கூறினார். அத்தொகுதியை பக்காத்தானிடமிருந்து கைப்பற்றி விட முடியும் என்று உதயகுமார் “மிகுந்த நம்பிக்கை கொண்டிருப்பதாக”த் தெரிகிறது.

“என் தொகுதியில் தகவலறிந்த இந்தியர்கள் உள்ளனர். அவர்கள் இண்ட்ராப் மற்ற இனத்தவர் ஆதரவின்றி தனித்து வெல்ல முடியாது என்பதால் இண்ட்ராப் வைப்புத்தொகையையே இழந்து விடும் என்கிறார்கள்”, என்று மருத்துவரும் டேவான் முஸ்லிமாட் பாஸின் உதவித் தலைவருமான மரியா கூறினார்.

பேரணியில் 5,000 பேர்

1981 தேர்தல் விதிமுறைகளின்படி நாடாளுமன்றத் தொகுதியில் போட்டியிடும் ஒருவர் ரிம10,000 வைப்புத்தொகை  செலுத்த வேண்டும். சட்டமன்றத் தொகுதிக்கு ரிம5,000.

போடப்படும் வாக்குகளில் எட்டில் ஒரு பகுதியைப் பெறாத வேட்பாளரின் வைப்புத்தொகை பறிமுதல் செய்யப்படும்.

நேற்றிரவு சிலாங்கூர், கிள்ளான், கம்போங் ஜாலான் கெபுனில் நடைபெற்ற செராமா ஒன்றில் உரையாற்றிய பின்னர் சித்தி மரியா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது அவரிடம் இண்ட்ராப் போட்டியிடுவது பற்றி வினவப்பட்டது.

அந்த செராமாவில் அவருடன் பிகேஆர் நடப்பில் தலைவர் அன்வார் இப்ராகிம், காப்பார் எம்பி  எஸ்.மாணிக்கவாசகம், அம்பாங் எம்பி சுரைடா கமருடின், ஸ்ரீமூடா சட்டமன்ற உறுப்பினர் சுஹாய்மி ஷாபி, ‘Sakmongkol AK47’என்ற புனைப்பெயரில் பிரபலமாக விளங்கும் வலைப்பதிவரான அரிப் சப்ரி ஆகியோரும் கலந்துகொண்டு பேசினர்.

5,000 பேர் கலந்துகொண்ட அக்கூட்டத்தில் நிறைமாத கர்ப்பிணியான  செர்டாங் எம்பி தியோ நை சிங் (வலம்) கலந்துகொண்டது குறிப்பிடத்தக்கது. 18-வரி மலாய் கவிதை ஒன்றை வாசித்த அவர், அதில் பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கையும் அவரின் துணைவியார் ரோஸ்மா மன்சூரையும் கிண்டல் செய்தார், தியோ பெங் ஹொக்கின் மரணத்துக்கு வருத்தம் தெரிவித்தார், கூட்டத்தினர் பக்காத்தான் ரக்யாட்டுக்கே வாக்களிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

இன்னும் ஒரு மாதத்தில் முதல் பிரசவத்தை எதிர்நோக்கி இருக்கும் தியோ, பிரவச காலத்தில் தேர்தல் வைக்கப்பட்டாலும் அதில் போட்டியிடப்போவதாகக் கூறினார்.

TAGS: