‘மகாதீரிடம் சர்வாதிகார குணங்கள் இருந்தன’

முன்னாள் பிரதமர் டாக்டர் மகாதீர் முகமட்-டிடம் சர்வாதிகாரக் குணங்கள் இருந்ததை அரசியல் ஆய்வாளர்கள் ஒப்புக் கொள்வதாகத் தோன்றுகிறது. ஆனால் அந்த குணங்கள் நன்மையைக் கொண்டு வந்தனவா அல்லது தீங்கை ஏற்படுத்தினவா என்பதில் அவர்கள் மாறுபட்டுள்ளனர்.

1987ம் ஆண்டு உள்நாட்டுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் பலர் கைது செய்யப்பட்ட நடவடிக்கையின் போது மகாதீர் சர்வாதிகாரத்துடன் நடந்து கொண்டார் என யூனிமாஸ் என்ற  Universiti Malaysia Sarawak விரிவுரையாளர் ஜெனெரி அம்ரி கூறுகிறார்.

“அச்சிடுவது, வெளியிடுவது,  விநியோகிப்பது சம்பந்தப்பட்ட சட்டங்களை 1984ம் ஆண்டுக்கான அச்சுக்கூட, வெளியீட்டுச் சட்டத்தின் கீழ்  மகாதீர் ஒருங்கிணைத்தார். தாம் அதிகாரத்தில் இருந்த போது எதிர்க்கட்சிகளுடைய வெளியீடுகளைத் தடை செய்வதற்கு அவருக்கு அது உதவியது,” என அவர் சினார் ஹரியானிடம் கூறினார்.

மகாதீரின் கீழ் மலேசியா வழிகாட்டும் சர்வாதிகாரத்தில் இருந்ததாக யூடிஎம் என்ற Universiti Teknologi Malaysia விரிவுரையாளர் அஸ்மி ஹசான் கூறினார். மகாதீர் ‘கொள்கைப் பிடிப்புள்ள உறுதியான’ தலைவராக இருந்தார் என்றும் அவர் சொன்னார்.

“பல பண்பாடுகளையும் பல இன உணர்வுகளையும் கொண்டுள்ள மலேசியா போன்ற ஒரு நாட்டுக்கு அது அவசியமாகும். வளர்ச்சித் திட்டங்கள் தேக்கமடையாமல் இருப்பதற்கு அத்தகைய தலைவர்கள் நமக்குத் தேவை,” என்றார் அவர்.

இதனிடையே அந்த மலாய் நாளேடு இணையத்தின் மூலம் கருத்துக் கணிப்பு நடத்திய 353 பேரில் 79 விழுக்காட்டினர்  மகாதீரை சர்வாதிகாரி என முத்திரை குத்தலாம் என்பதை ஒப்புக் கொண்டார்கள்.

தம்மை ஏன் மக்கள் சர்வாதிகாரி எனக் கருதுகின்றனர் என தமது வலைப்பதிவை வாசிக்கின்றவர்களிடம் அந்த நான்காவது பிரதமர் நேற்று வினவியிருந்தார்.

 

TAGS: