சாட்சிகள் எண்ணிக்கை குறைவாக இருப்பது கண்டு ஹனிப் ஏமாற்றம்

ஏப்ரல்28 பெர்சே 3.0 பேரணி குறித்து விசாரணை நடத்தும் சிறப்புக் குழுவிடம் சாட்சியம் அளிக்க வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது அக்குழுவின் தலைவர் ஹனிப் ஒமாருக்கு மிகுந்த ஏமாற்றம் அளித்துள்ளது.

“வன்செயல்கள் நிகழ்ந்ததாக பலரும் கூறுகிறார்கள்.ஆனால், சாட்சியம் அளிக்க முன்வருவோர் எண்ணிக்கை குறைவாக இருப்பது ஏமாற்றம் தருகிறது”, என்று நேற்று கிளப் சுல்தான் சுலைமானில் மலாய்மொழி நாளேடான சினார் ஹரியானிடம் ஹனிப் தெரிவித்தார்.

இதுவரை, த சன் செய்தித்தாள் ஆசிரியர் ஆர்.நடேசன் உள்பட எண்மர் மட்டுமே  குழுவிடம் சாட்சியம் அளித்துள்ளதாக அவர் கூறினார்.

அக்குழு விசாரணையைத் தொடங்கும் முன்னரே பெர்சே குறித்து ஹனிப் தெரிவித்த சில கருத்துகள் அக்குழுமீது  பொதுமக்கள் அதிருப்திகொள்ள காரணமாக இருந்தன.

சாட்சிகளில் ஒருவர், போலீசார் ஆர்ப்பாட்டக்காரர்களை அரச சிலாங்கூர் கிளப்புக்கு க் கொண்டு செல்லும் வழியில் அவர்களிடம் முரட்டுத்தனமாக நடந்துகொண்டார்கள் என்று தெரிவித்ததாக ஹனிப் கூறினார்.

ஆர்ப்பாட்டக்காரர்களில் ஒருவரின் உடல் முழுக்க இரத்தத்தைக் கண்டதாகவும் அவர் சொன்னார்.  பொதுமக்கள் தவிர்த்து ஆர்ப்பாட்டத்தின்போது பணியில் இருந்த போலீஸ் அதிகாரிகளும் சாட்சியமளிக்க அழைக்கப்படுவார்கள் என்று ஹனிப் தெரிவித்தார். “பேரணியின்போது வன்முறையாக நடந்துகொண்ட போலிஸ்காரர்கள்மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்”, என்றும் அவர் குறிப்பிட்டார்.

TAGS: