சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ராஜெயா ஆகியவற்றில் தண்ணீர் நிலவரத்தை கண்காணிப்பதற்கு அமைச்சரவை சிறப்புக் குழுவை அமைக்கும் என எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப, நீர் வள அமைச்சர் பீட்டர் சின் கா ஹுய் அறிவித்துள்ளார்.
“அந்தச் சிறப்புக் குழுவுக்கு துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமை தாங்குவார். அதன் முதல் கூட்டம் அடுத்த வாரம் நடைபெறும்,” என சின் இன்று நிருபர்களிடம் கூறினார்.
சிலாங்கூரில் தண்ணீர் விவகாரத்தை குறிப்பாக தண்ணீர் பங்கீட்டை அமலாக்க விரும்புவதாக நீர் வளச் சலுகை பெற்றுள்ள சபாஷ் நிறுவனம் அறிவித்துள்ளதை சூடான பிரச்னை என அமைச்சரவை கருதுவதாகவும் சின் சொன்னார்.
“சபாஷ் நடவடிக்கைகளை எடுத்துக் கொள்ள விரும்புவதாக சிலாங்கூர் அரசாங்கம் அறிவித்துள்ளதை ஆய்வு செய்யவும் அமைச்சரவை எண்ணுகிறது,” என்றும் சின் குறிப்பிட்டார்.
நீர் பங்கீட்டு நடவடிக்கையை சபாஷ் தொடருமா என்ற கேள்விக்குப் பதில் அளித்த அவர், அந்த விஷயத்தை அமைச்சரவை விவாதிக்கும் என்றார்.
“சிறப்புக் குழு உறுப்பினர்கள் கூடி முடிவுகளை எடுத்தவுடன் அவை பொது மக்களுக்கு அறிவிக்கப்படும்,”என்றும் சின் குறிப்பிட்டார்.
13வது பொதுத் தேர்தலுக்கு முன்னதாக கூட்டரசு அரசாங்கம் சிலாங்கூர் அரசாங்கத்துடனான தண்ணீர் நெருக்கடியைத் தீர்த்து விட முடியுமா என அவரிடம் வினவப்பட்டது.
அதற்கு அந்த எரிசக்தி, பசுமைத் தொழில்நுட்ப அமைச்சர் பதில் அளிக்க மறுத்து விட்டார்.
“எந்தக் கருத்தும் இல்லை,” என அவர் முடித்துக் கொண்டார்.