போலீஸ் முரட்டுத்தனம் மீது ஹனீப் சாதுவாக இருப்பதாக பெர்சே சாடியுள்ளது

தேர்தல் சீர்திருத்தங்கள் கோரி ஏப்ரல் 28ம் தேதி நடத்தப்பட்ட பேரணியின் போது போலீஸ்காரர்கள் தொழில் ரீதியாக நடந்து கொள்ளவில்லை என ஹனீப் குழு தெரிவித்துள்ள கருத்தை பெர்சே சாடியுள்ளது.

அந்த பேரணியின் போது போலீசார் காட்டிய முரட்டுத்தனத்தைக் கருத்தில் கொண்டால் அந்தக் கருத்து “நலிவான பதில்” என அது வருணித்தது.

பெர்சே வன்முறைகள் எனக் கூறப்படுவதை விசாரிப்பதற்காக அரசாங்கம் அமைத்துள்ள குழுவுக்கு தலைமை ஏற்றுள்ள ஹனீப் ஒமார் தெரிவித்தாக கடந்த செவ்வாய்க் கிழமை சன் நாளேட்டில் வெளியான அந்தக் கருத்து பற்றி பெர்சே வழிகாட்டல் குழு வருத்தம் அடைந்துள்ளது.

“சில போலீஸ் அதிகாரிகள் ஆர்ப்பாட்டக்காரர்களை தொழில் ரீதியான முறையில் கையாளவில்லை,” என ஹனீப் சொன்னதாக அந்த நாளேடு செய்தி வெளியிட்டது. போலீஸ்காரர்கள் ஆர்ப்பாட்டக்காரர்களை “தேவையில்லாமல் அறைந்த” வீடியோக்களைப் பார்த்த பின்னர் அவர் அவ்வாறு கூறினார்.

அதே பேரணி குறித்து சுஹாக்காம் என்ற மலேசிய மனித உரிமை ஆணையம் நடத்தும் பொது விசாரணையில் “அளவுக்கு அதிகமான, முழுக்க முழுக்க நியாயமற்ற வன்முறைகளில் ஈடுபட்டதாக” சாட்சியமளித்தவர்களின் கூறியதற்கு நேர்மாறாக அந்தக் கருத்து அமைந்துள்ளது என பெர்சே இன்று விடுத்த அறிக்கை கூறியது.

“புக்கிட் அமான் கட்டுப்பாட்டு மய்யத்தில் உள்ள கண்காணிப்பு சாதனங்கள் ( monitors ) வழி நிலைமையை கண்காணித்துக் கொண்டிருந்த கோலாலம்பூர் தலைமை போலீஸ் அதிகாரி முகமட்  சாலே, போலீசார் தொழில் முறைக்கு மாறான வழிகளில் ஆர்ப்பாட்டக்காரர்களைக் கையாளுவதைக் கண்டார் என்றும் ஹனீப் கூறினார்.”

“என்றாலும் சில ஆர்ப்பாட்டக்காரர்களுடைய மருத்துவ அறிக்கைகளில் கூறப்பட்டுள்ளது போன்று போலீசார் முரட்டுத்தனமாக நடந்து கொண்டதாகவும் அதிக பலத்தைப் பயன்படுத்தியதாகவும் கூறப்படுவதை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை.”

 

TAGS: