காதிர்: என்னுடைய காலத்தில் மெர்தேக்கா பிஎன்-னுக்குச் சொந்தமானதாக இல்லை

சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பாரபட்சமற்றதாக இருக்க வேண்டும் என முன்னாள் தகவல் அமைச்சர் அப்துல் காதிர் ஷேக் பாட்சிர் கூறுகிறார்.

ஆனால் இப்போது அந்த நிகழ்வுகளை பிஎன் எடுத்துக் கொண்டு விட்டதாகத் தோன்றுகிறது என அவர் சொன்னார்.

“இவ்வாண்டுக்கான சுதந்திர தினக் கருப் பொருள் ‘Janji Ditepati’ (வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) என்பதாகும். அது பலருக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது எனக்குப் புரிகிறது.”

“அந்தக் கருப் பொருள் நிச்சயம் வரும் பொதுத் தேர்தலுக்கான பிஎன் சுலோகம் என்பதில் ஐயமே இல்லை.”

“அரசாங்கம் அதிக நம்பிக்கை கொண்டுள்ளது. கர்வத்துடன் இயங்குகிறது என்பதை அது உணர்த்துகிறது. முழுமையாக மலேசியர்களைப் பற்றி அதற்கு கவலை இல்லை. மெர்தேக்கா பிஎன் சொத்து என்பதைப் போல அது செயல்படுகிறது,” என அப்துல் காதிர் நேற்று விடுத்த அறிக்கை கூறியது.

தாம் அமைச்சராக இருந்த காலத்தில் ஏழு ஆண்டுகளுக்கு நான் மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களுக்கான குழுவுக்கு தலைவராக பணியாற்றியுள்ளேன் என்றும் அப்போது கொண்டாட்டங்கள் நடு நிலையாக இருப்பதை உறுதி செய்வதில் பிஎன் மிகவும் கவனமாக இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.

“1999ம் ஆண்டு தொடக்கம் 2006ம் ஆண்டு வரையில் ‘Keranamu Malaysia’ என்னும் கருப்பொருள் தொடர்ச்சியாக ஆறு ஆண்டுகளுக்குப் பயன்படுத்தப்பட்டது. எனக்குத் தெரிந்த வரை அடுத்தடுத்த ஆண்டுகளில் அந்தக் கருப் பொருள் மாற்றப்பட்டாலும் நடு நிலையாக இருந்தது,” என்றார் அவர்.

“நான் பொறுப்பில் இருந்த போது சுதந்திர தின நிகழ்வுகளில் கலந்து கொள்ளுமாறு நான் எதிர்க்கட்சிகள் வசமிருந்த மாநிலங்களையும் தலைவர்களையும் அழைத்துள்ளேன். அவர்களும் அதற்கு முழு ஆதரவு அளித்தனர். கொண்டாட்டங்களும் வெற்றி அடைந்தன.”

“மலேசியர்களிடையே ஐக்கியத்தை வலுப்படுத்துவதற்கு மெர்தேக்கா கொண்டாட்டங்கள் பொன்னான வாய்ப்பாகும். ஆனால் இந்த முறை அரசாங்கத்தின் ஆணவம், கர்வம் சுய நலப் போக்கு காரணம் அந்த வாய்ப்பு தூக்கி எறியப்பட்டு விட்டது,” என்றார் அப்துல் காதிர்.

மொத்தம் செலுத்தப்பட்ட  வாக்குகளில் பாதிக்கும் சற்று கூடுதலான வாக்குகளையே பிஎன் பெற்றது என்பதை அரசாங்கத்திற்கு அவர் நினைவுபடுத்தினார்.

“ஆகவே ஒவ்வொருவரும் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் வகையில் அரசாங்கம் மற்ற பாதிப்பேருடைய ஆதரவைப் பெறுவதற்கான வழிகள் குறித்து பரிசீலிக்க வேண்டும்.”

இவ்வாண்டு மார்ச் 19ம் தேதி அம்னோவிலிருந்து விலகிய அப்துல் காதிர் இக்காத்தான் என அழைக்கப்படும் தமது சொந்தக் கட்சியை அமைத்து அதற்குத் தலைவராக இருந்து வருகிறார்.

அரசியல் சுலோகம் ஒன்றை சுதந்திர தினக் கொண்டாட்டங்களுக்கு கருப் பொருளாக பயன்படுத்தப்படுவது குறித்த குறைகளை தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் நிராகரித்துள்ளார்.

மற்ற பல நாடுகளில் அது வழக்கமான நடைமுறை என்றும் அவர் சொன்னார்.

இவ்வாண்டுக்கான மெர்தேக்கா தினக் கொண்டாட்டங்களை மேற்பார்வை செய்யும் பொறுப்பை அவர் ஏற்றுள்ளார்.

 

TAGS: