பக்காத்தானில் பயங்கரவாதிகள் ஊடுருவியிருப்பது பற்றி ஹிஷாமுக்கு “உறுதியாகத் தெரியவில்லை”

பக்காத்தான் ராக்யாட்டுக்குள் கம்யூனிஸ்ட்களும் பயங்கரவாதிகளும் ஊடுருவியிருப்பதாக கூறப்படுவது மீது தமக்கு ‘உறுதியாகத் தெரியாது’ என உள்துறை அமைச்சர் ஹிஷாமுடின் ஹுசேன் கூறியிருக்கிறார்.

“என்னிடம் அந்த விவகாரம் தொடர்பில் இப்போதைக்கு எந்தத் தகவலும் இல்லை. ஆகவே அது உண்மையா இல்லையா என்பதை என்னால் சொல்ல முடியாது,” என ஹிஷாமுடின் சொன்னதாக சின் சியூ நாளேடு இன்று செய்தி வெளியிட்டுள்ளது.

“இந்த அளவுக்கு மட்டுமே என்னால் சொல்ல முடியும். இந்த விஷயம் மிகவும் உணர்ச்சிகரமானது,” என அவர் குறிப்பிட்டதாகவும் அந்த நாளேட்டின் இணையத் தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜேஐ எனப்படும் ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவுவதாக போலீஸ் சிறப்புப் பிரிவின்  E2 (M) தேசிய சமூக தீவிரவாத மருட்டல் பிரிவுத் உதவி இயக்குநர் முகமட் சோபியான் முகமட் மாக்கினுதின் கூறிக் கொண்டுள்ளது பற்றி ஹிஷாமுடின் கருத்துரைத்தார்.

“அந்தத் தகவல்கள் அனைத்துலக அமைப்புக்களிடமிருந்து வந்திருக்கக் கூடும். விசாரணைகள் முடியும் வரையில் நாம் அதனை வெளியிடக் கூடாது,” என்றார் அவர்.

சிலாங்கூர் போலீஸ் தலைமையகம் அளித்த விளக்கமளிப்பில் கலந்து கொண்ட பின்னர் உள்துறை அமைச்சர் நிருபர்களிடம் பேசினார்.

“எல்லை இல்லாத இந்த உலகில் பயங்கரவாதத்தை முறியடிப்பது போலீசாரின் கடமையாகும். உள்துறை அமைச்சு நிலைமையக் கண்காணித்து வருகின்றது. நிலைமை கட்டுப்பாட்டுக்குள் உள்ளது,” என அவர் மேலும் சொன்னார்.

ஜெம்மா இஸ்லாமியா பயங்கரவாதிகளும் முன்னாள் கம்யூனிஸ்ட்களும் எதிர்க்கட்சிகளுக்குள் ஊடுருவுவதாக கூறப்படுவது “விரக்தி அடைந்துள்ள” பிஎன் ஜோடித்துள்ள “அரசியல் நகைச்சுவை” என டிஏபி மூத்த தலைவர் லிம் கிட் சியாங் சாடியுள்ளார்.

ஊடுருவியுள்ளதாக கூறப்படும் கம்யூனிஸ்ட்களையும் ஜேஐ உறுப்பினர்களையும் பெயர் குறிப்பிடுமாறு டிஏபி தலைவர் கர்பால் சிங், போலீஸ் சிறப்புப் பிரிவுக்கு சவால் விடுத்துள்ளார்.

அதை ஒரு குருட்டுத்தனமான குற்றச்சாட்டு என்று வருணித்த அவர், பக்காத்தான் ரக்யாட்டைக் கீழறுக்கும் நோக்கத்துடன் அவ்வாறு கூறப்பட்டுள்ளது என்றார்.

“இது எதிர்த்தரப்ப்புக் கூட்டணியைக் கீழறுப்புச் செய்யும் முயற்சியே தவிர வேறு ஒன்றுமில்லை”, என்றார் அவர்.

இன்று கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில், கர்பாலை அவரது தேசநிந்தனை வழக்கு விசாரணைக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்தித்தனர்.