எம்டியுசி: புதிய பணி ஓய்வு வயதை உடனே அமல்படுத்துக

சட்டம் நடைமுறைக்கு வரும்வரை காத்திராமல் இப்போதே பணிஓய்வு வயதை 55-இலிருந்து 60-க்கு நீட்டிக்க வேண்டும் என்று மலேசிய தொழிற்சங்கக் காங்கிரஸ்(எம்டியுசி) தனியார் துறைக்குக் கோரிக்கை விடுத்துள்ளது.

தனியார்துறை ஊழியர்களின் பணிஓய்வு வயதை 60-க்கு நீட்டிக்க அரசாங்கம் ஒப்புக்கொண்டு அதற்கான சட்டமுன்வரைவும் கொண்டு வரப்பட்டு அண்மையில் மேலவையிலும் அது ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறது என்று எம்டியுசி உதவித் தலைவர் ஏ.பாலசுப்ரமணியம் கூறினார்.

அந்தச் சட்டமுன்வரைவு அரசு இதழில் வெளியிடப்பட்டு நடைமுறைக்குவர இன்னும் ஆறு மாதங்கள்கூட ஆகலாம்.அதற்குள்  ஆயிரக்கணக்கானோர் பணிஓய்வு பெறும் வயதான 55ஐ எட்டி விடுவார்கள். என்றாரவர்.

“அவர்களை நினைத்துதான் எம்டியுசி கவலை கொள்கிறது.அவர்களில் பெரும்பாலோர் ஆரோக்கியத்துடன் இருக்கிறார்கள், தொடர்ந்து வேலைசெய்ய ஆர்வமும் கொண்டிருக்கிறார்கள்.அதற்காக எம்டியுசி-இன் உதவியையும் நாடியுள்ளனர்”, என்று பெர்னாமாவிடம் பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.

“மேலும்,இவ்வூழியர்களுக்குப் பெரும் பொறுப்புகளும் இருக்கின்றன.இன்னும் கட்டி முடிக்காத வீட்டுக்கடன், காப்புறுதி, மருத்துவக் கட்டணங்கள், பிள்ளைகளின் படிப்பு போன்றவையும் இருக்கும்”.

குறைந்தபட்ச பணிஓய்வு வயது சட்டமுன்வரைவு 2012 அண்மையில் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.அதன்படி தனியார்துறையில் பணிஓய்வு வயது 60-க்கு உயர்த்தப்படுகிறது.ஒரு ஊழியர் குறைந்தபட்ச பணிஓய்வு வயதை எட்டும் முன்னர் அவரை வேலையிலிருந்து நிறுத்தக்கூடாது.

-பெர்னாமா

TAGS: