தேர்தல் வரலாற்றில் மிக மோசமானதாகவிருக்கும் என்று கருதப்படும் பதிமூன்றாவது பொதுத் தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சியை நிலைநிறுத்தவதற்காக அம்னோ 4 ஆர் (Race, Religion, Rulers and Riots) பொய் ஆட்டங்களை அதன் தேர்தல் வியூகத்தின் மையமாகக் கொண்டுள்ளது அம்பலமாகி விட்டது என்று டிஎபியின் மூத்த தலைவர் லிம் கிட் சியாங் கூறினார்.
டிஎபியை தாக்கி கண்டனம் செய்வதற்காக அது மலாய்க்காரர்களுக்கு, இஸ்லாத்திற்கு மற்றும் மலாய் ஆட்சியாளர்களுக்கு எதிரான கட்சி என்று கடந்த மூன்று ஆண்டுகளாக அம்னோ அதற்குச் சொந்தமான மற்றும் கட்டுப்பாட்டிலுள்ள முக்கிய ஊடகங்கள், சமுதாய ஊடகங்கள் மற்றும் இணையதளங்கள் மூலமாக 3 ஆர் பிரச்சாத்தை நடத்தி வந்தது. ஆனால், அந்த பொய் பிரச்சாரங்கள் இன்றைய தகவல் யுகத்தில் அவர்கள் எதிர்பார்த்த தாக்கத்தை ஏற்படுத்தவில்லை என்றாரவர்.
46 ஆண்டுகளுக்கு முன்பு 1966 ஆம் ஆண்டில் டிஎபி உருவாக்கப்பட்ட காலத்திலிருந்து அது இன, மத, வட்டாரம் ஆகிய வேறுபாடின்றி அனைத்து மலேசியர்களுக்கான அரசியல் கட்சியாக தன்னை அர்பணித்துக் கொண்டுள்ளது என்று அவர் மேலும் கூறினார்.
“1969 ஆம் ஆண்டு டிஎபி பங்கேற்ற முதல் பொதுத் தேர்தலில் நாங்கள் மலாய் வேட்பாளர்களை நிறுத்தினோம். அவர்களில் இருவர் சட்டமன்ற உறுப்பினர்களாக தேர்வு பெற்றனர் – ஒருவர் பேராக்கிலும் மற்றவர் நெகிரி செம்பிலானிலும் வெற்றி பெற்றனர். மலாய் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எங்களிடம் இருந்தனர், குறிப்பாக கியுபெக்ஸ் என்ற அரசு ஊழியர்களின் தொழிற்சங்க காங்கிரஸ்சின் தலைவர் அஹமட் நோர் பினாங்கு பாயான் பாருவிலிருந்து நாடாளுமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார்”, என்று லிம் தெரிவித்தார்.
மேலும், டிஎபிதான் அகில மலேசிய அளவிலான முதல் அரசியல் கட்சி என்ற பெருமையைப் பெற்றிருந்தது. அது தீவகற்ப மலேசியாவில் மட்டுமல்லாமல் சாபா மற்றும் சரவாக் ஆகிய மாநிலங்களிலும் கிளைகளைக் கொண்டிருந்ததோடு அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபட்டிருந்தது என்பதை அவர் சுட்டிக் காட்டினார்.
இதன் காரணமாக டிஎபிக்கு எதிரான அம்னோவின் 3 ஆர் ஆட்டம் (Anti-Malay, Anti-Islam and Anti-Malay Rulers) எடுபடவில்லை என்றாரவர்.
வரம்புடை முடியரசு (Constitutional Monarchy) அமைவுமுறைக்கான டிஎபியின் ஆதரவு சந்தேகத்திற்கும் சவாலுக்கும் அப்பாற்பட்டது. பக்கத்தான் ரக்யாட்டின் மூன்று உறுப்புக் கட்சிகளான டிஎபி, பிகேஆர் மற்றும் பாஸ் அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை அம்சங்களுக்கு – இஸ்லாம் மலேசியாவின் சமயம் மற்றும் மலாய் ஆட்சியாளர் அமைவுமுறை உட்பட – ஆதரவும், மதிப்பும், அவற்றை நிலைநாட்டுவதற்கான கடப்பாட்டையும் எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி வெளிப்படுத்தியுள்ளன என்று லிம் மேலும் விளக்கினார்.
“நாடாளுமன்றத்தில் பெப்ரவரி 1971 இல் நான் ஆற்றிய முதல் உரையில் இதனைத்தான் கூறியிருந்தேன்.”
“டிஎபிக்கு எதிரான அவர்களின் 3 ஆர் ஆட்டம் எதிர்பார்த்த அரசியல் தாக்கத்தை ஏற்படுத்துவதில் தவறி விட்டது என்பதை உணர்ந்து கொண்ட அம்னோ தலைவர்களும் பிரச்சாரவாதிகளும் இப்போது 4 ஆர் ஆட்டத்தை முன்வைக்கின்றனரா?, என்றவர் வினவினார்.
“அடுத்த பொதுத் தேர்தலில் அம்னோவும் பாரிசான் நேசனலும் தோல்வியுற்றால் மே 13, 1969 பேரிடர் போன்ற அமைதியின்மையும், கலவரமும் ஏற்படும் என்பது அந்த நான்காவது ஆர் ஆட்டம் வழி சாதுர்யமாக வெளியிடப்படும் செய்தியாகும்.
“கடந்த வெள்ளிக்கிழமை இனமானில் நடந்த ஒரு டிஎபி செராமாவில் பாரிசான் நேசனலும் பக்கத்தான் ரக்யாட்டும் அடுத்தப் பொதுத் தேர்தலில் இன்னொரு மே 13 மீண்டும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்வதற்கு ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டிருந்தேன். துணைப் பிரதமர் முகைதின் யாசின் மற்றும் பிரதமர் நஜிப் ரசாக் ஆகியோரின் எதிர்வினைக்காக நான் இன்னும் காத்துக் கொண்டிருக்கிறேன்”, என்று லிம் கூறினார்.