மாட் சாபு வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு

நேற்றிரவு, ஷா ஆலம் செக்‌ஷன் 19-இல் உள்ள பாஸ் துணைத் தலைவர் மாட் சாபு வீட்டின்மீது பெட்ரோல் குண்டு ஒன்று வீசப்பட்டது.இதனால் வீட்டின் முன்பகுதி சிறிதளவு சேதமடைந்தது.

நள்ளிரவைத் தாண்டி 12.30க்கு நிகந்த அச்சம்பத்தை அவரின் மகள் நூருல் ஹுடா உறுதிப்படுத்தினார்.குண்டு வெடிப்பால்  தீ மூண்டதாகவும் அதை அண்டைவீட்டார்கள் விரைந்து வந்து அணைத்தார்கள் என்றும் அணைத்த பின்னரே அதைப் பற்றி அவர்கள் தமக்குத் தெரியப்படுத்தினர் என்றும் அவர் கூறினார். தீயில், வீட்டின் வேலியும் முன்பகுதியும் சிறிது சேதமடைந்தன. 

“தீயை நான் பார்க்கவில்லை. நான் வீட்டைவிட்டு வெளியில் வந்தபோது(தீ அணைக்கப்பட்டிருந்தது) பெட்ரோல் நாற்றம் மட்டுமே இருந்தது”, என்று வழக்குரைஞரான நூருல் ஹுடா(27) கூறினார். சம்பவம் நிகழ்ந்தபோது அவர் வீட்டில் தனியாகத்தான் இருந்துள்ளார்.

நூருல் ஹூடாவின் தாயாரைத் தொடர்புகொண்டபோது அவரும் சம்பவம் நடந்ததை உறுதிப்படுத்தினார். ஆனால் அவர் பெர்லிசில் இருப்பதால் கூடுதல் விவரங்களைத் தர முடியவில்லை. முகம்மட் சாபு பினாங்கு சென்றிருக்கிறார்.

இப்படி ஒரு சம்பவம் நிகழ்ந்திருப்பது இதுவே முதல் முறை என்றாலும் தாம் அதை எண்ணிக் கலங்கவில்லை என்று நூருல் ஹூடா கூறினார். இப்படி ஏதாவது நிகழும் என்ற உணர்வு சிறிது காலமாக அவருக்குள் இருந்தது.

“கடந்த இரண்டு மூன்று நாள்களாக வீட்டுக்கு முன்புறம் உள்ள தெரு விளக்கு எரியாமல் போனதிலிருந்து மனம் அமைதியற்றிருந்தது. எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று எனக்குள் தீர்மானித்துக்கொண்டிருந்தேன்”, என்றாரவர்.

முகம்மட், செப்டம்பர் 8-இல் அடையாளம் தெரியாத ஒருவரிடமிருந்து ஒரு குறுஞ்செய்தி வந்ததாகவும் அதில் மனைவி, மகள் ஆகியோர்மீது எரி திராவகம் வீசப்படும் என்று எச்சரிக்கப்பட்டிருந்ததாகவும் கூறினார்.

அந்தக் குறுஞ்செய்தி பின்வருமாறு எச்சரித்திருந்தது: வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுகிறீர். ஆதாரமின்றிப் பேசும் நீர் ஒரு பொய்யர். இப்படி பேசுவதற்கு வருந்த வேண்டும். பேச்சை நிறுத்தாவிட்டால் உம் மனைவிமீதும் மகள்மீதும் எரி திராவகம் வீசப்படலாம்.

இந்தக் குறுஞ்செய்தியைக் கடுமையான எச்சரிக்கையாகக் கருதும்  முகம்மட், புக்கிட் கெப்போங் போலீஸ் நிலையத் தாக்குதல் மற்றும் மலேசிய சுதந்திரப் போராட்டம் பற்றிய தம் கருத்துகள் தொடர்பில் அம்னோவுக்குச் சொந்தமான உத்துசான் மலேசியாவில்,  வெளிவந்த செய்திகள்தான் இதற்குக் காரணம் என்றார்.

TAGS: