வீடுகள் உடைபடுமா?

[20.9.2011 – மலேசிய நண்பன்]

பூச்சோங்கில் 120 ஆண்டுகாலமாக வசித்துவரும் 24 இந்தியர்கள் 14 சீனர்கள் வீடுகள் உடைபடும் நிலையில் உள்ளன.

பூச்சோங் 12ஆவது மைலில் உள்ள கம்போங் பாரு பூச்சோங், பெக்கான் பூச்சோங் பகுதியைச் சுற்றியுள்ள 38 குடியிருப்புவாசிகளின் வீடுகள் எந்த நேரத்திலும் உடைபடவிருக்கின்றன.

மூன்று தலைமுறைகளாக அங்கு வசித்து வரும் அவர்களின் குடியிருப்புப் பகுதியில் தொழிற்சாலை கட்டப்படவிருக்கிறது. இதனால் வீடுகள் உடைபடவிருக்கின்றன. எம்.கணேசன், சதாசிவம், சௌந்தரராஜன் ஆகியோர் தங்கள் வீடு உடைபடுவதைத் தடுப்பதற்கு சுபாங் ஜெயா நகராண்மைக்கழகம் உதவ வேண்டும் என்று கூறினர்.

சுபாங் ஜெயா நகராண்மைக்கழக உறுப்பினர்கள் மைக்கல் தமிழ், கேஸ்விந்தர் சிங் ஆகிய இருவரும் தங்களது வீடுகள் உடைபடாமல் இருப்பதற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தினர்.

இந்த விவரம் குறித்து வரும் 25.9.2011 ஞாயிற்றுக்கிழமை அன்று சுபாங் ஜெயா நகராண்மைக்கழக அதிகாரியுடன் பேச்சு நடத்தப்படும்.

பூச்சோங் நாடாளுமன்ற உறுப்பினர் கோவிந்த் சிங்கிடமும் இந்த பிரச்சினை கொண்டு செல்லப்பட்டுள்ளது. தொழிற்சாலை கட்டுமானப் பணிக்காகத் தங்களின் வீடுகளை உடைப்பதா என்று குடியிருப்புவாசிகள் கேள்வி எழுப்பினர்.

தங்களுக்கு நிலம் அல்லது மாற்று வீடுகள் தரப்பட வேண்டும் என்று 38 குடியிருப்புவாசிகளும் சிலாங்கூர் மாநில அரசாங்கத்திடம் வேண்டுகோள் விடுத்தனர்.