முன்னாள் அம்னோ உச்சமன்ற உறுப்பினர் லாஜிம் உக்கினுக்கு அந்தக் கட்சி உறுப்பினர் தகுதியிலிருந்து ஏன் நீக்கப்படக் கூடாது என்பதற்குக் காரணம் காட்டுமாறு கோரும் கடிதம் ஒன்றை அம்னோ வழங்கியுள்ளது.
அதற்குப் பதில் அளிப்பதற்கு லாஜிமுக்கு இரண்டு வார அவகாசம் கொடுக்கப்படுள்ளதாக அம்னோ தலைமைச் செயலாளர் தெங்கு அட்னான் தெங்கு மான்சோர் தெரிவித்தார்.
‘Pakatan Perubahan Sabah’ அல்லது சபா சீர்திருத்த முன்னணியை லாஜிம் அமைத்துள்ளதையும் எதிர்க்கட்சி கூட்டணியுடன் அவர் அணுக்கமான தொடர்பு வைத்துக் கொண்டுள்ளதையும் அம்னோ கடுமையாகக் கருதுவதாக அவர் சொன்னார்.
“அம்னோ அமைப்பு விதி 20.8, எல்லா உறுப்பினர்களும் கட்சியை நேசிக்க வேண்டும் என்றும் அமைப்பு விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் கட்சியின் கௌரவத்தையும் நற்பெயரையும் காப்பாற்ற வேண்டும் என்றும் கூறுகிறது.”
“அங்கு நடந்துள்ளது, லாஜிமும் உள்ளூர் அரசியலில் உள்ள சிலரும் சம்பந்தப்பட்ட தனிப்பட்ட பிரச்னையாகும். நாட்டுக்கும் மக்களுக்கும் சிறந்த சேவை செய்துள்ள கட்சியை அதனுடன் இணைத்திருக்கக் கூடாது,” என்றார் தெங்கு அட்னான்.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் மற்ற கட்சிப் பொறுப்புக்களிலிருந்தும் ராஜினாமா செய்வதாக லாஜிம் ஏற்கனவே அறிவித்துள்ளார். ஆனால் சாதாரண அம்னோ உறுப்பினராக தொடர்ந்து இருந்து வரப் போவதாக அவர் சொன்னார்.
அவர் இன்னும் வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சர் பதவியிலிருந்து விலகவில்லை.
அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ராக்யாட்டுக்கு ஆதரவளிக்கப் போவதாக அவரும் துவாரான் எம்பி வில்பிரட் பூம்புரிங்-கும் அறிவித்துள்ளனர்.
ஊழலையும் சபாவில் நீண்ட காலமாக தொடரும் சட்ட விரோதக் குடியேற்றக்காரர் பிரச்னைக்கு கூட்டரசு அரசாங்கம் தீர்வு காணத் தவறியதும் தாங்கள் விலகுவதற்கான காரணங்களில் அடங்கும் என அவர்கள் கூறியுள்ளனர்.
அந்த இருவருடைய முடிவும் எதிர்பாராத விஷயமல்ல என்றும் பிஎன் கூட்டணியைப் பாதிக்காது என்றும் பிரதமரும் அம்னோ தலைவருமான நஜிப் அப்துல் ரசாக் தெரிவித்துள்ளார்.