மஇகா-வுக்குச் சொந்தமான ஏய்ம்ஸ்ட் (AIMST) பல்கலைக்கழகம் மீதான கணக்காய்வு அறிக்கையின் சில பகுதிகளை பிகேஆர் இன்று அம்பலப்படுத்தியுள்ளது.
பல மஇகா தலைவர்களை ‘பணக்காரர்களாக்குவதற்கு’ அந்தப் பல்கலைக்கழகத்தை நிறுவனம் ஒன்று ‘ஏமாற்றியதை’ அவை காட்டுவதாக அது கூறிக் கொண்டது.
ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழகத்தின் உணவு விடுதியை நடத்தி வரும் ஜெயா கபே ஹோல்டிங்ஸ் சென் பெர்ஹாட் ( Jaya Cafe Holdings Sdn Bhd ) மற்ற பல விஷயங்களுடன் உணவுகளை வழங்கியதற்காக ( catering ) 90,000 ரிங்கிட் ‘பொய்யான கோரிக்கை’ ஒன்றைச் சமர்பித்துள்ளதை அந்த கணக்காய்வு அறிக்கை காட்டுவதாக பிகேஆர் தேசிய வியூக கொள்கைப் பிரிவுச் செயலாளர் எஸ் கோபிகிருஷ்ணன் இன்று கூறினார்.
மாணவர்களுக்கான உணவுகளுக்காக 1.97 மில்லியன் ரிங்கிட் வரையில் அந்த ஜெயா கபே உதவித் தொகை பெற்றதையும் அதன் ஊழியர்கள் ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக மாணவர் அடுக்கு மாடி வீடுகளில் இலவசமாக தங்க வைக்கப்பட்டதையும் அந்த அறிக்கை காட்டுவதாகவும் அவர் சொன்னார்.
அந்த சிறப்புச் சலுகைக்கு ஜெயா கபே பினாங்கு மஇகா இளைஞர் தலைவர் ஜே தினகரனுக்கு சொந்தமானது மட்டும் காரணமல்ல. அதன் இரண்டு இயக்குநர்கள் மற்ற இரண்டு மஇகா தலைவர்களினால் ‘முன்மொழியப்பட்டவர்கள்’ என்பதும் காரணமாகும் என கோபிகிருஷ்ணன் குறிப்பிட்டார்.
“ஜெயா கபே ஹோல்டிங்ஸ்-க்கு சலுகைகள் ஏன் வழங்கப்பட்டுள்ளது என்பது இப்போது தெளிவாகியுள்ளது. ஆதாயத்தைத் தரக் கூடிய உணவு விடுதி குத்தகையிலிருந்து நேர்மையற்ற முறையில் பயனடைவதற்காக (மஇகா தலைவர்களினால்) அமைக்கப்பட்ட ஒர் நிறுவனம் அதுவாகும்,” என கோபிகிருஷ்ணன் நிருபர்களிடம் கூறினார்.
மற்ற மஇகா தலைவர்களுடைய பதிலுக்காக காத்திருப்பதால் மலேசியாகினி அவர்களுடைய பெயர்களை வெளியிடவில்லை.
போலீஸ், எம்எசிசியிடம் புகார்கள்
“அடுத்த சில நாள்களில் பதில்கள் கிடைக்கவில்லை என்றால், இவ்விவகாரத்தில் சம்பந்தப்பட்டவர்கள், ஏய்ம்ஸ்ட் பல்கலைக்கழக பணியாளர்கள் உட்பட, மீது போலீஸ்சிலும் எம்எசிசியிலும் புகார்கள் செய்யப்படுவதற்கான நடவடிக்கைகளை பிகே ஆர் மேற்கொள்ளும்”, என்று கோபிகிருஷ்ணன் கூறினார்.