பிகேஆர்: கார்களுக்கான கலால் வரி படிப்படியாக அகற்றப்படும்

கார்களுக்கு விதிக்கப்படும் கலால் வரியை அகற்றுவதற்கு பிகேஆர் தெரிவித்த யோசனை படிப்படியாக அமலாக்கப்படும். அவ்வாறு செய்வதால் பழைய கார் விற்பனைச் சந்தையில் ஏற்படக் கூடிய தாக்கத்தைத் தணிக்க முடியும்.

இவ்வாறு அந்தக் கட்சியின் வியூக இயக்குநர் ராபிஸி இஸ்மாயில் டிவிட்டர் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

“கலால் வரியைக் கைவிடுவது படிப்படியாக இருக்க வேண்டும். அப்போது தான் நடப்பு பழைய கார்களுக்கான மதிப்பும் கட்டம் கட்டமாக குறையும். அது சம நிலையாக இருக்க வேண்டும்,” என அவர் சொன்னார்.

கார் விலைகள் குறைவதால் சாலைகளில் கார்கள் எண்ணிக்கை பெருகி போக்குவரத்து நெரிசல் ஏற்படாது என அவர் கருதுகிறார்.

கார் விலைகள் எளிதாக ஏற்றம் இறக்கம் காணாது. காரணம் அவை அன்றாடப் பொருட்கள் அல்ல. விலைகளில் ஏற்படக்கூடிய மாற்றம் வாங்கப்படும் கார் எண்ணிக்கை மீது உடனடியாக எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாது என்றும் ராபிஸி விளக்கினார்.

“அது வாகனமாகும். அன்றாடப் பொருட்கள் அல்ல. மக்களிடம் பணம் இருந்தால் அவர்கள் மேலும் நல்ல காருக்கு மாறுவார்கள். அதிகமான கார்களை வாங்க மாட்டார்கள்,” எனக் குறிப்பிட்ட அவர்.

2006ம் ஆண்டு விலைகள் வீழ்ச்சி அடைந்த போதிலும் 2006லும் 2007லும் கார் விற்பனை மந்தமாக இருந்ததைச் சுட்டிக் காட்டினார்.

பிகேஆர் தலைமையகத்தில் நிருபர்களிடம் பேசிய ராபிஸி, பிகேஆர் கட்சியின் வாகனக் கொள்கையை அதன் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் அடுத்த வியாழக் கிழமை வெளியிடுவார் எனத் தெரிவித்தார்.

“அவர் நடைமுறைகளை அறிவிப்பார். நாங்கள் கொள்கைகளை முன் வைத்து பழைய கார்கள் மதிப்பு, சாலைகளில் உள்ள கார்கள் எண்ணிக்கை, வாகனக் கடன்கள் ஆகியவை மீதான கேள்விகளுக்கு  பதில் அளிப்போம்.”

 

TAGS: