லாஜிம் உக்கின் வீடமைப்பு, ஊராட்சி துணை அமைச்சராக நியமனம் செய்யப்பட்டது உடனடியாக ரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அந்த நியமனத்தை ரத்துச் செய்வதற்கு யாங் டி பெர்துவான் அகோங் துவாங்கு அப்துல் ஹலிம் முவாட்ஸாம் ஷா ஒப்புதல் அளித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் இன்று விடுத்த அறிக்கை கூறியது.
கூட்டரசு அரசமைப்பின் 43வது பிரிவின் 5வது விதியுடன் இணைத்து வாசிக்கப்பட்ட 43ஏ பிரிவின் 3வது விதிக்கு இணங்க அந்த ரத்து ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
அம்னோ உச்ச மன்ற உறுப்பினர் பொறுப்பிலிருந்தும் பியூபோர்ட் அம்னோ தொகுதித் தலைவர், பியூபோர்ட் பாரிசான் நேசனல் தலைவர் ஆகிய பதவிகளிலிருந்தும் உடனடியாக ராஜினாமா செய்வதாக கடந்த சனிக்கிழமை லாஜிம் அறிவித்தார்.
என்றாலும் அவர் அம்னோ உறுப்பினராக தொடர்ந்து இருந்து வரப் போவதாக அவர் சொன்னார்.
வீடமைப்பு ஊராட்சி துணை அமைச்சர் என்ற தமது பதவி குறித்து முடிவு செய்வதை பிரதமர் நஜிப் அப்துல் ரசாக்கிடம் விட்டு விடப் போவதாகவும் லாஜிம் அப்போது தெரிவித்ததாகக் கூறப்பட்டது.
துணை அமைச்சர் என்ற ரீதியில் லாஜிமின் நிலை பற்றி திங்கட்கிழமை முடிவு செய்யப்படும் என பெக்கானில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றில் நஜிப் பின்னர் அறிவித்தார்.
பெர்னாமா