முக்ரிஸ்: என் தந்தையை இரண்டாவது முறையாக சங்கடப்படுத்த வேண்டாம்

கெடாவில் பிஎன் மீண்டும் அதிகாரத்துக்குத் திரும்புவதற்கு வாக்களிப்பதின் மூலம் கெடா மக்கள் தமது தந்தையார் டாக்டர் மகாதீர் முகமட் மீது கொண்டுள்ள பாசத்தை மெய்பிக்க வேண்டும் என ஜெர்லுன் நாடாளுமன்ற உறுப்பினர் முக்ரிஸ் மகாதீர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கடந்த தேர்தலில் கெடாவில் பிஎன் தோல்வி கண்டது மகாதீருக்கு பேரிடியாகும். காரணம் அந்த முன்னாள் பிரதமர் கெடாவை சேர்ந்தவர் என முக்ரிஸ் சொன்னார்.

“2008ல் ஏற்பட்ட தோல்வி எங்களுக்கு வெட்கத்தை ஏற்படுத்தியது. அவ்வாறு வெட்கப்பட்டவர்களில்  மகாதீரும் ஒருவர். ஏனெனில் அவர் கெடா-விலிருந்து வந்தவர்.”

“நீங்கள் மகாதீரை நேசித்தால் அவருக்கு இரண்டாவது முறையாக தர்ம சங்கடத்தை ஏற்படுத்த வேண்டாம்,” என கோலாலம்பூரில் நேற்று நோன்பு துறக்கும் நிகழ்வின் போது அவர் சொன்னார்.

நடப்பு கெடா நிர்வாகம் பற்றிக் குறிப்பிட்ட முக்ரிஸ், அடுத்த பொதுத் தேர்தலை ஒட்டி பாஸ் தலைவர்களில்  உட்பூசலில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகச் சொன்னார்.

“அவர்கள் இடங்களுக்காக மோதிக் கொள்கின்றனர். காரணம் அவர்கள் இப்போது எதிர்த்தரப்பில் இல்லை,” என்றார் அவர்.

முஸ்லிம் அல்லாதவர்களுடைய உணர்வுகளை கெடா மாநில அரசாங்கம் மதிக்கவில்லை என்றும் முக்ரிஸ் சாடினார். பொழுதுபோக்கு மய்யங்கள் சம்பந்தப்பட்ட நடைமுறைகளில் சிறுபான்மை சமூகங்கள் மீது பாகுபாடு காட்டப்படுவதாக அவர் குறிப்பிட்டார்.

“மாநில அரசாங்கத்தின் மீது முஸ்லிம் அல்லாதவர்களுடைய அதிருப்தி அதிகரித்து வருகின்றது.” “பொழுதுபோக்கு மய்யங்களுக்கு முஸ்லிம் அல்லாதவர்கள் அடிக்கடி செல்கின்றனர். நேர்மையற்றவர்கள் என்னும் தோற்றத்தை மாநில அரசாங்கம் விடுக்கும் அறிக்கைகள் தருகின்றன,” என்றும் முக்ரிஸ் தமது உரையில் கூறினார்.

 அம்னோவும் உட்பூசலைத் தவிர்க்க வேண்டும்

கெடாவை பிஎன் அடுத்த தேர்தலில் மீண்டும் கைப்பற்றுமானால் முக்ரிஸ் மந்திரி புசாராக நியமிக்கப்படலாம்என்ற ஊகங்கள் பற்றி வினவப்பட்ட போது அந்தக் கேள்விக்கு பதில் அளிக்காமல் முதலில் கெடா பிஎன் வேறுபாடுகளைத் தீர்த்துக் கொள்ள வேண்டும் என்றார்.

“கெடாவை மீண்டும் வெல்வதற்கு நான் எல்லா உதவிகளையும் செய்துள்ளேன். வெற்றிக்கு ஒற்றுமை மிக முக்கியமாகும்.”

“ஒற்றுமை இல்லாமல் மாநிலத்தை மீண்டும் பிடிப்பது பற்றிக் கனவு கூட காண வேண்டாம். நாம் தோல்வி கண்டால் நாம் எப்போதும் வருத்தமடைய வேண்டியிருக்கும்,” என்றார் அவர்.

 

TAGS: