நஸ்ரி: விசாரணை இன்றி தடுப்புக் காவலில் வைப்பது தொடரும்

உள்நாட்டு பாதுகாப்புச் சட்டம் (இசா) மற்றும் அதுபோன்ற இதரச் சட்டங்கள் அகற்றப்பட்டாலும், விசாரணை இன்றி தடுத்து வைக்கப்படும் நடைமுறை தொடரும் என்று சட்டத்துறைக்கான அமைச்சர் முகமட் நஸ்ரி கூறினார்.

இசா சட்டத்திற்கு மாற்றாக தாக்கல் செய்யப்படவிருக்கும் இரு புதிய சட்டங்கள் விசாரணை இன்றி தடுத்து வைப்பதை அனுமதிக்கும் ஏனென்றால் பயங்கரவாதத்திற்கு எதிரானப் போரில் அது முக்கியக் கூறாக இருக்கிறது என்றாரவர்.

பயங்கரவாதத்திற்கு எதிரானப் போர் உலகளவிலானதால் சட்டத்துறை தலைவர் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நீதிபதிகள், இதில் சம்பந்தப்பட்டுள்ள உள்நாட்டினர் மற்றும் வெளிநாட்டினர் ஆகியோருடன் கலந்தாலோசிப்பார் என்றும் அவர் கூறினார்.

“சாதாரண கிரிமினல் குற்றத்திற்குக்கூட ஒருவரை விசாரணை இன்றி கைது செய்யலாம். இதனை 14 நாள் காவல் என்று கூறுகிறோம். அதுவும் ஒருவகையான தடுப்புக் காவல்தான்”, என்று அவர் மேலும் கூறினார்.

அம்மாதிரியான சூழ்நிலையில் செய்யப்படும் கைதில் தடுத்து வைக்கப்படவர் குற்றவாளியாக கருதப்படுவதில்லை.

“ஆதராம் சேகரிப்பதற்காக ஒருவர் தடுத்து வைக்கப்பட்டுள்ளார் என்று மக்களுக்குத் தெரியும்”, என்று நஸ்ரி விளக்கினார்.

இருப்பினும், திருத்தப்படும் கூறு தடுத்து வைக்கப்பட்டிருக்கும் காலம் பற்றியதாகும். நீண்ட கால தடுப்புக் காவல் கொடுமையானதாக கருதப்படுகிறது என்று அவர் விளக்கமும் அளித்தார்.

தடுப்புக் காவலுக்கான கட்டாய காலத்தை மேலும் நீட்டிக்கும் பொறுப்பு நீதிமன்றத்திற்கு கொடுக்கப்படும் என்று கூறிய நஸ்ரி, இது கடந்த வியாழக்கிழமை பிரதமர் ஆற்றிய உறையில் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றார்.

“இனிமேல் உள்துறை அமைச்சரின் அல்லது வேறு எந்த ஓர் அமைச்சரின் கையெழுத்தைப் பெறுவதற்கான (தடுப்புக் காவல் உத்தரவு பிறப்பிப்பதற்காக) கொள்கை கிடையாது. இனிமேல் இல்லை”, என்றார் நஸ்ரி.

TAGS: