தீயொழுக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது அவற்றுக்குச் சாட்சிகளாக ஊடகங்களும் உடன் இருப்பது அவசியம்தான் என்கிறது சுயேச்சை இதழியல் மையம் (சிஐஜே).
“அதிரடி நடவடிக்கைகளில் ஊடகங்களுக்கு வேலை என்ன என்று சிலர் கேட்கலாம்.அது தேவை என்றே கருதுகிறோம்.
“நடப்பதைச் செய்தியாக அறிவிப்பதற்கு மட்டுமல்ல,அதிகார அத்துமீறல்கள் நிகழாமல் பார்த்துக்கொள்ளவும் அது அவசியமாகும்”, என்று சிஐஜே நேற்று அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டிருந்தது.
இது, தீயொழுக்கத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது ஊடகங்களை அழைத்துச் செல்வதை போலீசார் நிறுத்த வேண்டும் என்று மகளிர் உதவி நிறுவனமும் மலேசிய மனித உரிமை ஆணையமும் (சுஹாகாம்) இரண்டு நாள்களுக்குமுன் கேட்டுக்கொண்டதற்கு நேர் எதிராக இருக்கிறது.
செய்தியாளர்கள், இதழியல் நன்னெறிகளைக் கடைப்பிடித்து தங்கள் செயல்களினால் தீங்கு நேரா வண்ணம் பார்த்துக்கொள்ள வேண்டும் என்று சிஐஜே தெரிவித்தது.
இம்மூன்று தரப்பினரும் அவ்விவகாரத்தில் கருத்துத் தெரிவிக்கக் காரணமாக இருந்தது ஓரியெண்டல் டெய்லி நியுஸில் வெளிவந்த ஒரு செய்தியாகும்.அதில், அதன் செய்தியாளர் லோ லீ வென் தீயொழுக்கத்துக்கு எதிரான நடவடிக்கையின்போது செய்தியாளர்கள் நடந்துகொண்ட விதத்தை விவரித்திருந்தார்.
பாலியல் பணியாளர்கள் ஆடைகளின்றியும் அரைகுறை ஆடையில் இருப்பதையும் படம்பிடிப்பதில்தான் செய்தித்தாள் புகைப்படக்காரர்கள் ஆர்வம் காட்டினார்களாம்.அவர்கள் கேமிராவில் சிக்காமல் தவிர்க்கப் பார்த்தாலும் விடாமல் விரட்டிச் சென்று படம் பிடித்தார்களாம்.
இதைப் பார்க்கையில், நடப்பதை நடுநிலையுடன் பதிவுசெய்ய வேண்டிய பொறுப்பில் உள்ள ஊடகவியலாளர்கள் அத்துமீறி நடந்துகொண்டிருப்பதாகத் தெரிகிறது என்று ஊடகக் கண்காணிப்பு அமைப்பான சிஐஜே கூறியது.
இதுபோன்ற நிலைமையில் செய்தியாளர்கள் பின்பற்ற அனைத்துலக நடைமுறை ஒன்றை உருவாக்கும் நோக்கில் உள்துறை அமைச்சு சம்பந்தப்பட்ட தரப்பினருடன் பேச்சு நடத்த வேண்டும் என்று அது கேட்டுக்கொண்டது.
“அது,அதிரடி நடவடிக்கைகளோ, பேரணிகளோ எல்லாத் தரப்பினரின் உரிமைகளும் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்தும்”,என்றது கூறியது.