ராயிஸ் ‘Janji Ditepati’-யில் உறுதியாக இருக்கிறார், அது அமைச்சரவை முடிவு என்கிறார்

இவ்வாண்டுக்கான ‘Janji Ditepati’ தேசிய தின சுலோகத்தில் எந்த மாற்றமும் இருக்காது. அந்த சுலோகத்தை அமைச்சரவை கூட்டாக முடிவு செய்துள்ளதாக தகவல், தொடர்பு, பண்பாட்டு அமைச்சர் ராயிஸ் யாத்திம் கூறுகிறார்.

அந்த சுலோகம் கட்சிச் சார்புடையது என கடுமையாகக் குறை கூறப்பட்டுள்ள போதிலும் தமது அமைச்சு அந்த சுலோகத்தில் உறுதியாக இருக்கும், பின் வாங்காது என ராயிஸ் இன்று தமது டிவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார்.

“55 Tahun Merdeka, Janji Ditepati’ (55 ஆண்டுகள் சுதந்திரம், வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன) என்பது அமைச்சரவையின் முடிவாகும். அந்தக் கருப்பொருளில் தகவல் அமைச்சு உறுதியாக நிற்கும்,” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதே டிவிட்டர் பதிவில் தேசிய தினக் கருப் பொருளையும் அமைச்சரையும் குறை கூறி தலையங்கம் எழுதியுள்ள ஆங்கில மொழி நாளேடான மலாய் மெயிலையும் ராயிஸ் சாடினார்.

“இது வரை அரசாங்கம் அடைந்துள்ள வெற்றிகளில் பொறாமை கொண்டுள்ள எதிர்க்கட்சிகளின் அரசியலை மலாய் மெயில் பெரிதுபடுத்துகிறது. அந்த சுலோகத்தினால் எதிர்க்கட்சிகளும் அவற்றின் தோழர்களும் நெருக்குதலுக்கு இலக்காகியுள்ளனர். காரணம் அவற்றிடம் சாதனைகள் ஏதுமில்லை,” என ராயிஸ் டிவிட்டரில் எழுதியுள்ளார்.

அந்த ஆங்கில மொழி நாளேட்டை  ராயிஸ் இரண்டாவது நாளாகத் தாக்கி எழுதியுள்ளார். அவருடைய நேற்றைய பதிவு: “மலாய் மெயில் தனது தவறான கதையின் மூலம் இன்று தனது உண்மையான எதிர்த்தரப்பு நிறத்தைக் காட்டியுள்ளது.”

கடந்த 55 ஆண்டுகளில் நாடு அடைந்துள்ள வெற்றிகளை காட்டுவது தகவல் அமைச்சின் ‘பொறுப்பு’ எனவும் அவர் தமது இன்றைய பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

“நமது சுதந்திர ஆண்டு நிறைவில் அவற்றை நாம் பாராட்ட வேண்டும். கொண்டாட வேண்டும். கடந்த காலப் போராட்டங்களும் முயற்சிகளும் நினைவு கூரப்பட வேண்டும்,” என ராயிஸ் மேலும் சொன்னார்.