மூசா: பக்காத்தானுடைய 20 விழுக்காடு எண்ணெய் உரிமப் பண வாக்குறுதி ‘பொருத்தமற்றது”

சபாவுக்கு கொடுக்கப்படும் எண்ணெய் உரிமப் பணத்தை ஐந்து விழுக்காட்டிலிருந்து 20 விழுக்காடாக உயர்த்த பக்காத்தான் ராக்யாட் அளித்துள்ள வாக்குறுதி பொருத்தமற்றது என அந்த மாநில முதலமைச்சர் மூசா அமான் கூறியிருக்கிறார்.

புத்ராஜெயா நிர்வாகம் செய்யும் எண்ணெய் வருமானம் இறுதியில் சபாவுக்கு திருப்பி விடப்படுவதாக மூசா உத்துசான் மிங்குவுக்கு அளித்த பேட்டியில் குறிப்பிட்டுள்ளார். மிங்குவான் மலேசியா உத்துசான் மலேசியாவின் ஞாயிற்றுக் கிழமை பதிப்பாகும்.

பள்ளிக்கூடங்கள், மருத்துவமனைகள், சாலைகள் போன்ற அடிப்படை வசதிகளை மேம்படுத்துவதற்கு செலவு செய்வதற்கு கூட்டரசு அரசாங்கத்துக்குப் பணம் தேவைப்படுவதாக அவர் சொன்னார்.

தற்காப்பு, உள்நாட்டு பாதுகாப்பு ஆகியவை உட்பட மற்ற அவசியமான செலவுகளும் சபாவுக்கு உள்ளன.

ஆகவே எண்ணெய் வருமான ஒதுக்கீட்டை  விரிவான கண்ணோட்டத்தில் பார்க்கப்பட வேண்டும் என்றார் மூசா.

“அது பக்காத்தான் அளிக்கும் பொருத்தமற்ற வாக்குறுதி ஆகும். நாட்டின் ஒரு பகுதி என்ற முறையில் நாம் விட்டுக் கொடுத்து பெற்றுக் கொள்ள வேண்டும்,” என்றார் அவர்.

2008ம் ஆண்டு பொதுத் தேர்தலுக்குப் பின்னர் பக்காத்தான் சபா வாக்காளர்களிடம் எண்ணெய் உரிமப் பணம் அதிகரிக்கப்படும் என வாக்குறுதி அளித்து வருகின்றது.

பிகேஆர் மூத்த தலைவர் அன்வார் இப்ராஹிம் மலேசியாவில் மிகவும் ஏழ்மையில் உள்ள சபாவுக்கு நியாயம் வழங்கப்படவில்லை எனக் கூறி அந்த வாக்குறுதியைத் தொடர்ந்து வழங்கி வருகிறார்.

என்றாலும் ஒவ்வொரு மலேசியத் திட்டத்திலும் பெரும்பணத்தை புத்ராஜெயா சபாவுக்கு வழங்குகிறது என்றும் வாக்குகளுக்காக அன்வார் அவ்வாறு கூறுகிறார் என்றும் பிஎன் தலைவர்கள் தெரிவித்துள்ளனர்.

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்கள்

சபாவில் சட்டவிரோதக் குடியேற்றக்காரரகள் பெரும் எண்ணிக்கையில் இருப்பது பற்றிக் குறிப்பிட்ட மூசா, அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு நிறையச் செய்யப்படுவதாகச் சொன்னார்.

சபாவின் பொருளாதார வளர்ச்சி, வாழ்வதாரத்தைத் தேடி பல அந்நியர்கள் அங்கு வந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

“அந்தப் பிரசனையை குறுகிய காலத்தில் தீர்க்கக் கூடிய எளிய பிரச்னை அல்ல என்பதை நான் ஒப்புக் கொள்கிறேன்.”

அந்த விஷயத்தைக் கவனிப்பதற்கு புத்ராஜெயா துணைப் பிரதமர் முஹைடின் யாசின் தலைமையில் சிறப்புக் குழுவை அமைத்துள்ளதாகவும் மூசா தெரிவித்தார்.

மாநில அளவிலும் அதற்காக ஒரு குழு தோற்றுவிக்கப்பட்டுள்ளது.

சட்ட விரோதக் குடியேற்றக்காரர்களை அவர்களுடைய சொந்த நாடுகளுக்குத் திருப்பி அனுப்ப போலீஸ், இராணுவம், குடிநுழைவுத் துறை ஆகியவை பல நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் அவர் சொன்னார்.

சபாவில் பிலிப்பீன்ஸுக்கு தூதரகப் பேராளர் அலுவலகம் இல்லாதது பிலிப்பினோ குடியேற்றக்காரர்களைத் திருப்பி அனுப்புவதில் பிரச்னைகள் ஏற்படுவதாகவும் மூசா தெரிவித்தார்.

இந்தோனிசியாவுக்கு கோத்தா கினாபாலுவில் தூதரகப் பேராளர் அலுவலகம் உள்ளது.

“நாங்கள் ஒன்றும் செய்யவில்லை என எதிர்க்கட்சிகள் சொல்வது உண்மையல்ல.”

“நாங்கள் அந்தப் பிரச்னையைத் தீர்ப்பதற்கு எங்களால் முடிந்ததைச் செய்கிறோம். ஆனால் அதற்குக் காலம் பிடிக்கும்,” என்றார் மூசா.

 

TAGS: